மனிதன் கடவுளிடம்:
வேட்கையில் அலைந்து, செல்வத்தில் வீழ்ந்து,
அந்தகன் அழைப்பு அருகினில் வரும்வரை
அயராது உழைத்தோம், தேடலில் தொலைந்தோம்.
வேலையின் சாலையில் காலைகள், மாலைகள்,
சோலைகள் உணரோம்; பாதையில் மலர்கள்,
சுனைகள், சுகங்கள் நுகர நேரமில்
வாழ்க்கையே எதற்கு வெற்றிகள் எதற்கு?
இழப்பினின் வலியில் துவண்ட மனத்தால்
இறப்பின், பிறப்பின் பொருள்களைத் தேடினேன்.
மக்களை யிழந்தேன்; தோழரை இழந்தேன்,
துக்கங்கள் மீறவே வாழ்க்கையில் தளர்ந்தேன்.
வெற்றிகள் வரலாம், தோல்விகள் தொடலாம்
மானிட வாழ்விலோ முடிவே நிச்சயம்.
இறப்பதே முடிவெனில் இலக்குகள் எதற்கு?
ஏனிந்த ஓட்டம், ஏனிந்தத் தேடல் ?
கலக்கம் மிகுந்து, கனத்த மனதுடன்
இலக்கைத் தேடி உன்னிடம் வந்தேன்
நேற்றின், இன்றின், நாளையின் நாதனே,
கடவுள் மனிதனிடம்:
ஏனிந்தத் தளர்ச்சி, எண்ணத்தில் அயர்ச்சி?
பிறப்பின் இறப்பின் பொருள்கள் கேளாய்.
சிறந்த நோக்குடை ஆன்றோர் பார்வையில்,
பிறப்பும் இறப்பும் காலத்தின் சக்கரம்;
பாலியம், வாலிபம், முதுமை யாவையும்
பார்வையின் மாயை, காலத்தின் மாற்றம்;
பருவத்தின் சுழற்சிபோல் உருவத்தின் சுழற்சி.
பருவங்கள் மாறினும் உருவங்கள் மாறினும்
ஆத்மா என்பது அணையா ஜோதி
ஆக்கவும் அழிக்கவும் முடியா இறுதி.
பிறப்பவை யாவும் என்னுடை மிகுதி.
அழுக்குறு ஆடையைக் களையும் செயல்போல்
ஆன்மா மாற்றுடல் தரித்திடல் நியதி.
என்னிடம் அடைதல் இயற்கையின் பகுதி.
மானிடர் புரியும் கரும வினைகள்,
வானினும் உயர்ந்த பண்பின் செயல்கள்,
சூனியம், சூது, பாதகம் ஆனவை
வானகக் கணக்கில் என்றும் தொடரும்.
இம்மையில் மும்மையின் வினைகள் துடைத்து,
செம்மையின் சிந்தையும்,சீலமும், ஞானமும்,
பரம்பொருள் மேல்சீர் பக்தியும் கொண்டால்
மனிதன் கடவுளிடம்:
மறைகள், மந்திரம், வேதம், நாதம்
பறைகள், நாயனம், கீர்த்தனம், ஓதுவார்
முறைகள் வழியே உய்யலாம் என்றால்,
புண்ணியம் ஒன்றே வாழ்க்கையில் வேண்டினால்,
பண்பினால், பக்தியால் வீடது கிட்டினால்,
உழைப்பினால் என்பயன்? இயங்கிதான் என்பயன்?
இழைத்த பாபங்கள் நீங்கத் தானம்,
நிதிவழிச் செய்வேன், தொழிலது காணேன்.
மதிமிகு முன்னோர் சொற்படி யாவையும்
விதிவசம் வைத்து, வீடுகள் துறந்து,
கடவுள் மனிதனிடம்:
அறவழிச் செல்வோர் மூவழிப் படுவர் -
ஞான யோகியர் அறிவினை நாடுவர்;
பக்தி யோகியர் கடவுளைத் தேடுவர்;
கரும யோகியர் கடமையே கண்ணினர்.
மூவழிப் பாதைகள் நல்வழிச் சேர்க்கும்;
மேல்வழி நடத்திப் பிறவிகள் அறுக்கும்;
நாவழி நல்மொழி, திடமதி, நற்குணம்
கொண்டவர் செயல்கள் கடவுளுக் கற்பணம்.
பக்தியர், ஞானியர் பாதைகள் இரண்டும்
பாமர மக்களுக் கானவை இல்லை.
பாவலர், காவலர், நாவிதர், யாவரும்
பல்வழிக் கரும யோகிகள் ஆகலாம்.
தன்வழிச் செல்வாய், தன்தொழில் செய்வாய்.
மண்ணில் கடமையை உணர்ந்து செய்பவர்
விண்ணை ஆளும் தேவரை ஒத்தவர்;
பண்பினால் அவரே கரும வீரர் .
புகழ்ச்சியில் மயங்கா, இகழ்ச்சியில் தளரா,
போற்றுவார் பேச்சில் பெருமிதம் உணரா,
தூற்றுவார் வார்த்தையில் தோல்வியைக் காணா
மேற்குணம் கொண்டார் துயரை வென்றார்.
கடமையைச் செய்து, பலன்களை நினையா
திடமனம் கொண்டவன் கரும வீரன்.
நடப்ப தெல்லாம் என்செயல் என்று
விட-மனம் கொண்டவன் கரும யோகி.
இயங்குதல் உன்கடன்; இயக்குதல் எம்தொழில்.
மயக்கம் களைவாய், மனவலி மீட்பாய்;
துயரங்கள் தீரவே அயரா துழைப்பாய்;
மனிதன் கடவுளிடம்:
அன்பினால் எந்தன் அறிவினைத் திருத்தி
பண்படச் செய்தாய், என்கடன் பணியே!
© #ஆனந்தக்கவிராயர்
Picture credit: Unsplash (Deb Dowd)
Title credit: Kannadasan
Theme: The Gita.