Tamil Poem - மக்களின் மன்னவன்

Ayodhya Rama


கோசலை மைந்தனாய் அவனியில் வந்தவன், 

குணங்களில் குன்றவன், தயரதன் நந்தனன், 

நாதமாய் நின்றவன், நால்வரில் முன்னவன், 

நாவினின் சொல்லிலே நிலைத்தவன் நின்றவன்.


முனிவரின் அருளிலே  மந்திரம் கற்றவன், 

பணிவினால் பிரம்மமா ரிஷியினை வென்றவன், 

இளவலின்  துணையுடன் அசுரரைக்  கொன்றவன்,  

வில்லினை வளைத்தவன், சீதையைக் கொண்டவன்.


தந்தையின் சொல்வழிக் கானகம் சென்றவன், 

தம்பியின் வழிபடப் பாதுகை தந்தவன், 

கங்கையின் மன்னனாம் குகனவன் நட்பினன்,  

அகலிகை குறைகெடக் காலடி ஈந்தவன்!


கானகம் உறையும்  வானக விந்தையர் 

மானது உருவில் மயங்கி அயர்ந்தவன், 

மனைவியின் பிரிவினால் மதியது தளர்ந்து   

மானுடப் பிறவியின் துயர்களைத் துய்த்தவன்! 


வாலியை வென்றவன், அவனுடைத்  தம்பியை, 

அநுமனின் துணையுடன் அரசனாய்ச் செய்தவன், 

சமுத்திரம் கடக்க வானர சேனையின், 

சகாயம்  கொண்டு சேதுவைச் செய்தவன்.  


இராவணன் சேனையை, மேக நாதனை, 

இரவினில்  பலமுறும் கும்ப கருணனை, 

இந்திர சித்தனை, அசுரரின் அறமிலா 

மந்திர வித்தையை  மாய்த்த மாமறன்! 


இந்திர லோக தேவ கணங்களும், 

மந்திர அசுரரும், மாந்தரும் வியந்த 

மாபெரும் போரினில் இராவண மன்னனை 

மண்ணுடன் மாய்த்து சீதையை மீட்டவன். 


அயோத்தி திரும்பிய மணிமுடி மன்னவன்,  

அறங்களின் நாயகன்,  குடிகளின் காவலன், 

பங்கயக் கண்ணினன், பல்கலை வல்லுனன், 

அடியவர் தேவைகள் ஆசையில் நல்குவன். 


மானுடன், மாயவன், தாயவன், தூயவன். 

மாந்தரைக் காத்திடும்  இரகுகுல நாயகன். 

நயந்து நம்முள் அமைதியை வேண்டுவோம்;

நலன்கள் மிகுந்திட நாயகன் அருள்வான்!


ஜெய் ஸ்ரீராம்!

© #ஆனந்தக்கவிராயர் 

Image credit: Wikipedia.

2 comments: