கனவு கலைந்து எழுந்தபோது விடிந்திருந்தது. ரசகுண்டு, பீமா இருவரையும் நாயர் கடைக்கு வரச்சொல்லி இருக்கிறோம் என்று நினைவு வந்தது. சுறுசுறுப்பாகத் தயாராகி வெளியே கிளம்பினார். லுங்கியுடன் வெளியே கிளம்பினால் சீதாப்பாட்டியிடம் திட்டு விழலாம் என்று தோன்ற, உடை மாற்றிக் கிளம்பினார்.
கீழே வரும்போது சீதாப்பாட்டி யாரிடமோ தொலைபேசியில் விவாதம் செய்வது கேட்டது. "இட்ஸ் ரிடிகுலஸ். எதாவது கேள்விப்பட்டால் தகவல் சரியா தப்பா என்று சம்பந்தப்பட்ட மனிதர்களிடம் விசாரிக்க மாட்டீர்களா? தகவல் என்னிடமிருந்து வந்திருக்க வாய்ப்பே இல்லை".
இதைக்கேட்டதும் தன்னை எதுவும் கேட்குமுன் நழுவிவிட வேண்டும் என்று கொல்லைப்புற வழியாக சுற்றி வெளியே வந்தார். "சீதே, உனக்கு நல்லா வேணும், செய்திக்காரர்களிடம் நல்லா மாட்டினே!" என்று புன்னகைத்துக்கொண்டே தெருவில் இறங்கினார். தெரு முனையில் மறுபடியும் ஓர் ஆள் அவரைத் தீவிரமாகப் பார்ப்பதாகத் தோன்றியது. அனால் நேற்றுப் பார்த்த அதே ஆளா என்று தெரியவில்லை. இவன் பேண்ட் சட்டை போட்டிருக்கிறான். ரெட்டை மண்டை. நேற்றுப் பார்த்தவன் கைலி கட்டியிருந்தான். முகம் நினைவில்லை,
நாயர் கடையில் அவர் நண்பர்கள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். சீதாப்பாட்டியின் வாக்குவாதம் பற்றிக் கேட்டவுடன் இன்னும் சந்தோசம். ஒரு டீ சொல்லிவிட்டு பெஞ்சில் உட்கார்ந்த பொது போன் "கிளுங்" என்றது.
அபர்ணா!
அவள் "குட் டே காஃபி ஷாப்" என்ற இடத்தில் சந்திக்க முடியுமா என்று கேட்டிருந்தாள். 'ஐஃபோன் இல்லாமல் எப்படிப் போவது?' என்று சிறிது நேரம் யோசித்து விட்டு உடனே வருகிறேன் என்று தகவல் அனுப்பினார். டீயைக் கேன்சல் செய்யச் சொல்லிவிட்டு நடையைக் கட்டினார்.
வழியெல்லாம் ஐஃபோன் கொண்டு வராததற்குச் சொல்லக்கூடிய காரணங்கள் யோசித்துக்கொண்டே போனார்.
காப்பிக்கடை நல்ல செழிப்பாகவே இருந்தது. பல நிறங்களில் மலர்களோடு வரிசையாகப் பூந்தொட்டிகள் வைத்திருந்தார்கள். அபர்ணாவைக் காணோம். அவர் அமர்ந்தவுடன் ஒரு பெண் மெனு கார்டை பவ்யமாகக் கொண்டு வைத்தாள். அதைப்பார்த்தவுடன், 'என்னது, ஏலக்காய் டீ முன்னூத்திச் சொச்சமா?' என்று அதிர்ந்தும், வெளியே, 'நண்பருக்காகக் காத்திருக்கிறேன்' என்பதுபோல் எதுவோ சொன்னார். பரபரப்பில் என்ன சொன்னோம் என்று அவருக்கே தெரியவில்லை.
ஐந்து நிமிடத்தில் அபர்ணா வந்தாள். பளிச்சென்ற புன்னகை. அவரின் நலம் விசாரித்தாள். அவர் கையில் இருந்த ஃபோனைப்பார்த்ததும் அவள் முகம் கொஞ்சம் மாறியதோ என்று அப்புசாமிக்கு சந்தேகம். அனால் ஒன்றும் கேட்காமல் அந்த ஃபோனையும் கையில் எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அபர்ணாவின் தலைக்குப்பின்னே இருந்த டிவியில் எதோ பரிச்சயமான முகம் தெரிந்தது. பார்த்தால் வாயெல்லாம் பல்லாக சீதாப்பாட்டி! வியப்பில் அபர்ணாவை மறந்துவிட்டு சீதாப்பாட்டி என்ன சொல்கிறார் என்று கேட்க ஆரம்பித்தார். "அஃப் கோர்ஸ் நாங்கள் எல்லாம் அவரின் விசிறிகள். உலக அமைதிக்காக அவர் எடுக்கும் எஃப்போர்ட்ஸ் எங்கள் எல்லோருக்கும் பிரமிப்பைக் கொடுத்தது". பின்னணியில் டிரம்ப் எழுதிய ஒரு ட்ரூத் சோசியல் செய்தியைக் காண்பித்தார்கள். ‘சீதாலட்சுமி என் நெடு நாளைய நண்பர். எனது விசிறியும் கூட. அவர் கொடுக்கும் அமைதிப் பரிசை நான் பெரிய பெருமையாகக் கருதுகிறேன்’ என்று எழுதியதோடில்லாமல், தான் சீதாப்பட்டியிடம் பரிசு வாங்குகிறாற்போல் சித்தரித்த படம் ஒன்றையும் இணைத்திருந்தார். ஆங்கிலத்தில் இருந்தாலும் அப்புசாமிக்கு ஓரளவு புரிந்தது.
பாட்டி பேசுவதைப் பதிவு செய்ய பலவித டிவி சேனல்கள் சுமார் இருபது மைக்குகள் வைத்திருந்தார்கள். எல்லோரும் ஒரே சமயத்தில் ஏதேதோ கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள்.
அதற்குள் அபர்ணா ஒரு வினோதமான காரியம் செய்தாள். அப்புசாமியின் பின்னால் இருந்த யாரையோ பார்த்து அவள் பயந்ததாகத் தெரிந்தது. 'விலுக்' என்று எழுந்தாள். இடது புறம் இருந்த தடுப்புச் சுவரை அணுகினாள். அதன்மேல் இருந்த சில பூந்தொட்டிகளை சுவற்றுக்கு அப்பால் வெளியே தள்ளிவிட்டாள். அந்தச் சுவற்றில் ஏறி வெளியே குதித்து ஓடினாள். அப்புசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னாலிருந்து ஒரு ஆள் ஓடிவந்து அதே மாதிரி அவனும் ஏறி குதித்துத் துரத்தத் தொடங்கினான். அதே ரெட்டை மண்டை ஆள்! எல்லாம் வெகு விரைவில் நடந்து விட்டன.
அப்புசாமிக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்தது. யாரவன், ஒரு இளம் பெண்ணைப் பட்டப் பகலில் துரத்துகிறான்? போலீசைக் கூப்பிட வேண்டும்.
போனைத் தேடினார். காணோம்! அதையும் அபர்ணா எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாள்!
அப்புசாமி கீழே இறங்கித் தெருவில் பார்த்தார். ஓடின இருவரையும் எங்கும் காணவில்லை. அவர் தலையில் மறுபடியும் தலையில் இடி விழுந்தது. 'கிழவியிடம் இன்னொரு போன் காணோம் என்று எப்படிச் சொல்வது?' என்று எண்ணிக்கொண்டே கால் போன போக்கில் எங்கேயோ போனார். இந்த அவமானத்தை ரசகுண்டு, பீமாவிடம்கூட சொல்ல வெட்கமாக இருந்தது.
'ஆனால் அபர்ணா நல்ல பெண். எப்படியாவது ஃபோனைத் திருப்பிக் கொடுத்துவிடுவாள். ஆனால் அதுவரைக்கும் எப்படி சமாளிப்பது? அவள் நம்மை எப்படித் தொடர்பு கொள்வாள்? அவளைத் துரத்தின ஆள் யார்?'
பூங்காவில் கொஞ்ச நேரம் உட்கார்ந்தார். மதிய நேரம் வந்தது. ஆனால் பசி இல்லை. வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தன. மறுபடி கொஞ்சம் சுற்றி விட்டு ஒரு வழியாக மாலை ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
அவர் உள்ளே வரும்போது சீதாப்பாட்டி வரவேற்பறையில் சில நண்பிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்புசாமியைக் கண்டவுடன் முகம் மலர்ந்து, "எங்கே போய்விட்டீர்கள்? போலீஸ் ஸ்டேஷனிலிருந்து இன்ஸ்பெக்டர் துரைமுருகன் வந்து உங்களுக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தார். அந்தக் கும்பலைப் பிடித்து விட்டார்களாம். உங்களை ஸ்டேட்மென்ட் எழுதிக்கொடுத்து விட்டு உங்கள் ஃபோனை வாங்கிப்போகச் சொன்னார்கள்."
அப்புசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. "சீதே, கொஞ்சம் மாடிக்கு வரியா?" என்று கேட்டார்.
மாடியில் சீதாப்பாட்டி: "உங்களுடன் பேசிக்கொண்டிருந்த பெண் ஒரு மோசடிக்கும்பல் தலைவி. சுத்த பிராடு. வயசானவர்களிடம் ஃபோன் ஆப் வழியாக அவர்கள் பென்ஷன் பணத்தைக் கொள்ளை அடிக்கும் கும்பல். இன்ஸ்பெக்டர் என்னிடம் சொன்னபோது உங்களிடம் கொள்ளை ஒன்றும் அடிக்க முடியாது, உங்களிடம் பணமே இல்லை என்று சொன்னேன். மிஸ்டர் துரைமுருகன் முதலில் உங்களையும் சந்தேகித்ததாகவும் இரண்டு நாட்கள் பின் தொடர்ந்ததில் உங்களுக்கு அந்த அளவு சாமர்த்தியம் கிடையாது என்று தெரிந்து கொண்டதாகவும் சொன்னார். 'ஆமாம், என் ஹஸ்பண்டுக்கு கொஞ்சம் விவரம் போதாது', என்று நானும் ஒப்புக்கொண்டேன். உங்களிடம் ஸ்டேட்மென்ட் மட்டும் வேண்டுமாம்."
அப்புசாமி திறந்த வாய் மூடாமல் இதை எல்லாம் கேட்டார், வார்த்தை ஒன்றும் வரவில்லை.
"சரி, கொஞ்சம் இருங்கள். மிஸஸ் பொன்னப்பன் எனக்காகக் காத்திருக்கிறாள். இன்று வந்த நல்ல நியூஸால் பல பேர்கள் எங்கள் பில்டிங்க்காக டொனேஷன் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். வீ ஆர் கெட்டிங் மோர் மணி தேன் வீ கேன் ஹாண்டில். அதைப்பற்றிப் பேசிவிட்டுப் பத்து நிமிஷத்தில் வருகிறேன். உங்களை நானே போலீஸ் ஸ்டேஷன் வரை அழைத்துப் போகிறேன். ஓ, உங்களுக்குக் காலையில் நடந்த விஷயங்கள் தெரியாது இல்லையா? அதையும் சொல்கிறேன்.", என்றார்.
"சீதே, சாப்பிட எதாவது இருக்கா? பசி தாங்கலை. வயத்துக்குள் சுண்டெலி ஓடுது", என்றார் அப்புசாமி.
முற்றும்!

No comments:
Post a Comment