ஆங்கிலத்தில் Fan Fiction என்று ஒரு வகை இலக்கியம் உண்டு. தங்கள் அபிமான எழுத்தாளர் நடையில், அவரது பாத்திரங்களைக்கொண்டு அவரது ரசிகர்கள் படைக்கும் படைப்புகள். வுட்ஹவுஸின் ஜீவ்ஸ், வூஸ்டர் பாத்திரங்களும், ஹாரி பாட்டர் பாத்திரமும் பல ரசிகர்களால் மீண்டும் நடமாட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.
நான் சிறு வயதில் ரசித்த பாத்திரங்களில் அப்புசாமித் தாத்தாவும் சீதாப்பாட்டியும் முக்கியமானவர்கள். இவர்கள் பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் ஜ. ரா. சுந்தரேசனால் செதுக்கப்பட்ட பாத்திரங்கள். பாக்கியம் ராமசாமியின் நடை ஒரு மாதிரி மணிப்ரவாளமாய் இருக்கும். சீதாப்பாட்டியின் நுனி நாக்கு ஆங்கிலமும், நாசுக்கும்; அப்புசாமியின் சென்னை பாஷையும், எளிய பழக்கவழக்கங்களும், சீதாப்பாட்டி மேலான மெலிய பொறாமையும் ரசிக்கத்தக்க முரண்களாய் நம்மை மகிழ்விக்கும். இவைகளிடையான இந்த வேற்றுமை கிட்டத்தட்ட ஜீவ்ஸ், வூஸ்டர் இருவரின் மாறுபாடுகள் மாதிரி.
அந்தப் பாத்திரங்கள் இன்று வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்ததன் விளைவே இந்தக் கதை. இதுவும் ஒரு ரசிகனின் எளிய முயற்சி.
ரசகுண்டுவுக்கு உடனே புரியவில்லை! "அபர்ணாவா? யாரு தாத்தா?"
"அதான் காப்பிக்கடைல பார்த்தோமே!"
"அது காப்பிக்கடை இல்லை தாத்தா, ஸ்டார்பக்ஸ்"
"ஏதோ ஒண்ணு"
ரசகுண்டுவுக்கு தாத்தாவின் உற்சாகம் புரிந்தது. அன்று காலை காப்பிக்காகக் காத்திருந்தபோது ஒரு இளம் பெண் அப்புசாமியைப் பார்த்துப் புன்னகைத்தாள். "உங்கள் கையில் இருப்பது ஐஃபோன் பதினேழா?"
அப்புசாமி பெருமை பொங்க, "ஆமாம், நேற்றுதான் வாங்கினேன்!" என்றார், தன் மனைவியிடம் எவ்வளவு கெஞ்சினோம் என்பதை மனதில் பின்னுக்குத் தள்ளி.
அப்போது அப்புசாமியின் ஆர்டருக்காக அவர் பெயரைக் கூப்பிட்டார்கள். தன் பெயரைச் சுருக்கி "அப்பு" என்று கொடுத்திருந்தார். அந்த அழைப்பைக் கேட்டவுடன் அந்த இளம்பெண் பிரகாசமாக, "என் பெயரும் அப்புதான்! அபர்ணா என்று பெயர், நண்பர்கள் அப்பு என்று கூப்பிடுவார்கள்!" என்றாள்.
அப்புசாமிக்கும் அவளுடைய நண்பராக விருப்பம்தான். அதை எப்படிச் சொல்வது என்று அவர் யோசிக்கையில், அபர்ணா உற்சாகக் குரலில், "உங்க ஃபோனை நான் கொஞ்சம் பார்க்கலாமா?" என்றாள்.
அப்புசாமி பெருமையாக போனை நீட்டினார். அந்தப் புது ஃபோன், புது நீலநிற உறையில் புதிதாக மேக்கப் போட்ட நடிகை போல மின்னியது. அபர்ணா அதை ஆவலுடன் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டுத் திருப்பிக் கொடுத்தாள். அவளுடைய ஏலக்காய் டீ வரும்வரை கொஞ்ச நேரம் பேசிக்கொண்டார்கள். அவள் கிளம்பிய உடனேதான் அவளுடைய தொடர்பு விவரங்கள் எதுவும் வாங்கவில்லை என்று அவருக்கு உறைத்தது. ரசகுண்டுவிடம் பலமுறை அதுபற்றிப் புலம்பியிருந்தார்.
ஆகவே அவர் ஆர்வம் புரிந்த ரசகுண்டு, "எங்கே பிரண்ட் ரிக்வெஸ்ட்? காமிங்க!" என்றான். அப்புசாமி ஃபோனை நீட்ட, அவன் அஜாக்கிரதையாய் வாங்கப்போக, அது கைநழுவி அருகிலிருந்த சாக்கடையில் விழுந்து மறைந்தது.
அப்புசாமிக்குத் தலையில் மூன்று இடிகள் ஒரே சமயத்தில் விழுந்த மாதிரி இருந்தது. புத்தம்புது ஃபோன் தவறியது ஒரு பக்கம் என்றால், அபர்ணாவின் ஃபிரண்ட் ரிக்வஸ்டை ஆறப்போடுகிறோமே என்ற கலக்கம் ஒரு புறம். இரண்டையும் விட சீதாப்பாட்டியின் மேல் இருந்த பயம் வேறு!
"அடேய் ரசம், படுபாவி! இப்படிப் பண்ணிட்டியே! சீதைக்கிழவிக்கு மட்டும் நான் போனைத் தொலைத்துவிட்டேன் என்று தெரிந்தால் என்னை சிக்னல் இல்லாத காட்டுக்கு அனுப்பிவிடுவாள்!", என்று புலம்பினார்.
ரசகுண்டுவுடன் கலந்தாலோசித்தபின் அந்தச் சாக்கடையில் இறங்கித் தேடுவது என்ற முடிவுக்கு வந்தார். கால்சராயை மடக்கிக் கொண்டு அவர் சாக்கடையில் இறங்குவதற்கும் சீதாப்பாட்டியின் பி எம் டபிள்யு தெருமுனை திரும்பி அங்கே வருவதற்கும் சரியாக இருந்தது.
சீதாப்பாட்டி வண்டியை நிறுத்தி ஒரு பார்வை பார்த்தாள். அதில் தெரிந்தது கோபமா, அருவெறுப்பா, அனுதாபமா என்று சொல்ல முடியாத ஒரு முகபாவம். அப்புசாமிக்கு இன்னும் வயிற்றில் புளியைக் கரைத்தது. ஒரு சமிக்ஞை செய்துவிட்டு வண்டியை ஒட்டிக்கொண்டு போய்விட்டாள். அப்புசாமி தலையைக்குனிந்து கொண்டு பலி ஆடுபோல் வீட்டை நோக்கி நடந்தார். ரசகுண்டு அவருக்குத் துணையாக வர மறுத்துவிட்டான். பாதகன்!
அடுத்த அரைமணிநேரம் தாத்தாவுக்கு ஒரு சூறாவளியில் தலையைக் கொடுத்த உணர்ச்சி. "ஹவ் இர்ரெஸ்பான்சிபிள். ஃபோனை சாக்கடையில் போட்டதும் இல்லாமல் அதில் இறங்க வேறு செய்தீர்கள். உங்களுக்கு கௌரவம் பற்றிக் கவலை இல்லாமல் இருக்கலாம். ஐ ஹாவ் மை ரெப்புட்டேஷன் டு ஒர்ரி அபௌட்." என்று பொரிந்து தள்ளிவிட்டாள்.
அப்புசாமி அடுத்த இரண்டு நாட்கள் போன் இல்லாமல் தவித்தார். ஃபோன் இல்லாதது கை உடைத்த மாதிரி இருந்தது. ரசகுண்டு ஃபோனில் நாயைக் கல்லால் அடிக்கும் விளையாட்டு ஒன்று போட்டுக் கொடுத்திருந்தான். அந்த விளையாட்டில் அவர் கில்லாடி. ஆனால் ஒரு பிரச்சினை - ஒரு நாள் விளையாடா விட்டால் கூட ரேட்டிங் குறைந்துவிடும். மூன்றாம் நாள் வேறு வழியில்லாமல் வெட்கத்தை விட்டு, "சீதே ஃபோன் தொலைந்தது தொலைந்ததுதான், எனக்கு இன்னொரு ஐஃபோன் வாங்கித் தாயேன்". என்று கேட்டுவிட்டார். பதில் ஒன்றும் இல்லை!
மறுநாள் பனிப்போர் நீடித்தது. மாலை நான்கு மணிக்கு அப்புசாமி தினத்தந்தியை நான்காம் முறை படித்துக்கொண்டிருந்தார். சீதாப்பாட்டி அவர் முன்பு வந்து ஒன்றும் பேசாமல் அமேசான் பெயர் பொறித்த ஒரு அட்டைப்பெட்டியை வைத்துவிட்டுப் போய்விட்டாள்.
அப்புசாமியின் உள்ளம் துள்ளிக் குதித்தது. "என்னதான் பொரிந்து கொட்டினாலும், என்மேல் சீதைக்கிழவிக்குப் பாசம் உண்டு. என் பர்சனாலிட்டி அப்படி" என்று எண்ணிக்கொண்டு டப்பாவைப் பிரித்தார். அதில் ஐஃபோன் இல்லை. அதற்குப் பதிலாக ஒரு மலிவான ஃபோன் இருந்தது. போனின் பெயரும் ஒன்றும் சுவாரசியமாக இல்லை. "நத்திங்" - இது என்ன பெயர்?
இருந்தாலும் தன் ஏமாற்றத்தை வெளியே காட்டாமல் சீதாப்பாட்டியிடம் நன்றி சொல்லிவிட்டு, அப்படியே, புதுப் ஃபோனை தன் உபயோகத்துக்குத் தக்கவாறு மராமத்து பண்ணி வாங்கி வரலாம் என்று போனார். பாட்டியோ முகத்தையே பார்க்காமல் தனக்கு கிளப் மீட்டிங் இருப்பதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
"அடியே கிழவி, உனக்கு என்ன திமிர்? ஏதோ உனக்கு இந்த சமாச்சாரங்கள் தெரிவதால் கேட்கிறேன். நீ உதவி பண்ணாட்டிப் போ! எனக்கு வேற ஆள் இல்லையா?" என்று பல்லைக் நறநறத்துக்கொண்டு ரசகுண்டுவின் வீட்டுக்கு நடந்தார்.
ரசகுண்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு சினிமாவுக்குப் போய்விட்டான். பீமா ராவைத் தேடிப்போனார். பீமாவும் இல்லை. அவன் மனைவி, 'இதோ வந்துவிடுவார்!" என்று உட்காரவைத்துவிட்டு ஒரு கப் டீ கொண்டு வந்தாள்.
குடிக்க ஆரம்பித்தபின், "தாத்தா, உங்கள் புது ஃபோன் தொலைந்துவிட்டதாமே!" என்றாள்.
அப்புசாமிக்குப் புரை ஏறிவிட்டது. கொஞ்சம் சுதாரித்தபின், "உனக்கு எப்படிம்மா தெரியும்?" என்று கேட்டார்.
"சீதா அக்கா மாடி வீட்டு ராபர்ட் கிட்ட பேச வந்திருந்தாங்க. உங்க ஃபோன் பத்தித்தான்! ராபர்ட் அந்த போன் கடையின் நிர்வாகியாம். உங்க ஃபோனுக்கு இன்சூரன்ஸலேர்ந்து பணம் வாங்கித் தரேன்னு அக்கா கிட்ட சொன்னார்!"
அதிர்ச்ச்சியைக் காட்டாமல் பீமா வரும்வரை இருந்து ஃபோனைக் காட்டினார். பீமா அசகாய சூரன். பழைய நம்பரை வைத்து பக்கத்துக் கடையில் கொடுத்து எப்படியோ எல்லாம் சரி செய்து கொடுத்துவிட்டான்.
ஃபோன் வேலை செய்த உடன் அபர்ணாவின் ஃபிரண்ட் ரிக்வெஸ்ட்டைத் தேடி அதை ஒப்புக்கொண்டார்.
அதனால் கிடைத்த குதூகலம் திரும்பி வரும்போது அறவே ஓடிவிட்டது. "அடே சீதைக்கிழவி! என்ன தைரியம் இருந்தால் என் ஃபோனுக்கு வள்ளிசா இன்சூரன்ஸ் பணம் வாங்கிட்டு எனக்கு இந்த லொட்டை ஃபோன் வாங்கி குடுப்பே? இதுக்கு எத்தனை பிகு, எவ்வளவு பெரிய லெக்சர்! பீமா பொண்டாட்டி என்னன்னா என்னைத் தாத்தாங்கறா. உன்னை அக்காங்கறா! எனக்கு எவ்வளோ இளம் ஸ்நேகிதிகள் உண்டுன்னு தெரிஞ்சா பொறாமைலே செத்தே போயிடுவே!"
சீதாப்பாட்டியை எப்படியாவது பழி தீர்க்கவேண்டும் என்று முடிவெடுத்தார்!
(Appusamy stories, அப்புசாமி கதைகள்)
(Pic credit: ChatGPT)

Acknowlegement to my friend JP, who suggested the line "சீதைக்கிழவிக்கு மட்டும் நான் போனைத் தொலைத்துவிட்டேன் என்று தெரிந்தால் என்னை சிக்னல் இல்லாத காட்டுக்கு அனுப்பிவிடுவாள்".
ReplyDeleteI had originally written it as "தண்ணி இல்லாத காட்டுக்கு". Hi suggestion is definitely more Appusamy like than what I'd written.