அடுத்த நாளும் சீதாப்பாட்டி அதிகம் பேசவில்லை. அப்புசாமியும் ஒன்றும் பேசாமல் தன் வேலைகளைக் கவனித்தார்.
பீமாராவின் மனைவி இரண்டு நாட்கள் அண்ணன் வீட்டுக்குப் போனதாகத் தகவல் கிடைத்தது. அதனால் அவனுடைய வீடு அவசர ஆலோசனைக்குத் தகுந்த இடம் என்று முடிவு செய்தார். ரசகுண்டுவையும் அங்கே வரச்சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
கிளம்பும் பொழுது அபர்ணாவிடம் இருந்து ஒரு தகவல் வந்தது. அவளுக்கு அப்புசாமியின் ஐஃபோனை மறுபடி ஒருமுறை பார்க்க வேண்டுமாம். உல்லாசமாக சீட்டி அடித்தபடி, "அடேய் அப்புசாமி, இன்னும் உன்னிடம் கொஞ்சம் காந்த சக்தி இருக்குடா!" என்று சொல்லிக்கொண்டார். அவளைப் பார்க்கப் போக ஆசைதான், அனால் போய் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அதனால் தனக்கு கொஞ்சம் முக்கிய வேலைகள் இருப்பதாகவும், ஓரிரு நாள் கழித்து சந்திக்கலாம் என்றும் ஒரு செய்தி அனுப்பினார்.
பீமாராவ் வீட்டில் நுழைந்தபோது தூள் பகோடா வாசனை மூக்கைத் துளைத்தது. பக்கத்தில் இருந்த நாயர் கடையிலிருந்து பக்கோடாவும், டீயும் வரவழைத்திருந்தான். டீயை உறிஞ்சிக்கொண்டே அப்புசாமி பேச்சை ஆரம்பித்தார். "டேய் பீமா, ரசம், இந்த சீதேயோட தொல்லை தாங்கலை. அவளைப் பழி வாங்க ஏதாவது வழி சொல்லுங்கடா!"
"பழி, கிழியெல்லாம் வேண்டாம். பாவம் வயசானவங்க", என்றான் பீமாராவ். அவனுக்கு சீதாப்பட்டியைக் கண்டால் கொஞ்சம் பயம்.
"எங்க பேட்டைல ஒரு வஸ்தாத் இருக்கான். அவன்கிட்ட சொல்லி கொஞ்சம் பயமுறுத்தி வைக்கலாமா?", என்றான் ரசகுண்டு.
"அதெல்லாம் வேண்டாம். அவங்களுக்கு என்ன பிடிக்கும், அதுலேர்ந்து ஆரம்பிங்க தாத்தா", என்றான் பீமா.
"அவளுக்கு என்ன, அவளோட கிளப்தான். 'பாட்டிகள் முன்னற்றக் கழகம்' தான் அவளுக்கு உயிர்."
"அப்ப அதுலேர்ந்து அவங்கள வெளியேத்த எதாவது வழி பாக்கலாம்", என்றான் ரசகுண்டு. பின்பு எதோ நினைத்துக்கொண்டு "அவங்க லெட்டர்பாட் கிடைச்சா அவங்க எழுதினா மாதிரி ஒரு ராஜினாமாக் கடிதம் எழுதிடுங்க".
"அத இங்கிலிஷ்ல எழுதணுமே", என்றார் அப்புசாமி. "எழுதினாலும் அவ போய் 'நான் எழுதலை'ன்னு சொல்லிடுவா".
"அப்ப அவங்க எழுதினா மாதிரி வேற யாருக்கவாது லெட்டர் எழுதணும். அவங்க எழுதலைன்னு தெரியறதுக்குள்ள பெரிய சங்கடமா ஆகணும்."
கொறிக்க பக்கோடா தீர்ந்து போன பாதிப்பில் ரசகுண்டு டிவி ரிமோட்டை அழுத்தினான். செய்திகளில் அமெரிக்க அதிபர் டிரம்ப் யாரிடமோ ஒரு வஸ்துவை வாங்கிக்கொண்டிருந்தார்.
"இது என்னடா வாங்கறார்? பல கைகள் சேர்ந்து ஒரு திருப்பதி லட்டு பிடிப்பது போல் இருக்கு?" என்றார் அப்புசாமி, தன் தொல்லைகளை மறந்து.
"அது ட்ரோபி தாத்தா. ஃபுட்பால் சங்கம் அவருக்கு அமைதிப் பரிசு கொடுக்கிறது."
"ஃபுட்பாலுக்கும் அமைதிக்கும் என்னடா சம்பந்தம்? எப்பப் பார்த்தாலும் ஒத்தனை ஒத்தன் உதைப்பான், இல்ல தள்ளுவான்".
ரசகுண்டு திடீரென்று பிரகாசமானான். "தாத்தா, பாட்டி லெட்டர்ஹெட்ல டிரம்ப்க்கு ஒரு லெட்டர் எழுதுங்க. பாட்டிகள் முன்னேற்றக் கழகம் அவருக்கு ஒரு பரிசு கொடுக்கிறாங்கன்னு. பா. மு. க அமைதிப் பரிசு!"
"அதுக்கும் இங்கிலீஷிலே எழுதணுமே!", என்றார் அப்புசாமி கவலையுடன்.
"என் மச்சான் எழுதுவான், காலேஜ் பையன். இங்கிலிஷ்ல பொளந்து கட்டுவான்," என்றான் ரசகுண்டு.
"நம்புவாங்களாடா?"
"ஒரு லெட்டர் எழுதிட்டு, டிவி சேனலுக்கு ஒரு காப்பி அனுப்பிடலாம். நம்பினாலும் நம்பாட்டியும் பாட்டியோட மண்டை காஞ்சிடும்" என்றான் பீமா.
இன்னும் கொஞ்சம் விவாதித்து கடைசியில் ஒரு வழியாக முடிவுக்கு வந்தார்கள். அப்புசாமி சீதாப்பாட்டியின் அறையிலிருந்து சில லெட்டர்ஹெட் தாள்களை எடுத்து வந்து முன்னூறு ருபாய் பணத்துடன் ரசகுண்டுவுக்குக் கொடுத்தால் அவன் மற்ற ஏற்பாடுக்களைப் பார்த்துக்கொள்வான்.
அன்று செவ்வாய்க்கிழமை. அன்று மாலை சீதாப்பாட்டி பா. மு. க காரியங்களை முடித்துவிட்டு ஒன்பது மணிக்குத்தான் வீடு திரும்புவாள். அப்புசாமிக்கு அந்த நினைவு வந்தவுடன் 'சீதேக்கிழவி வர்ரதுக்குள்ள லெட்டர்ஹெட் தேடி எடுக்கணும்' என்று வேகமாக நடந்து வீட்டை அடைந்தார்.
வீட்டில் யாரும் இல்லை. தன் சாவியால் வீட்டைத் திறந்து சீதாப்பாட்டியின் அறையை அடைந்தார். எதையும் கலைக்காமல் கவனமாகத் தேடினார். சிறிது நேர முயற்சிக்குப்பின் தேடியது கிடைத்தது. நாலைந்து தாள்களைக் கிழித்துக்கொண்டு எல்லாவற்றையும் மறுபடி அடுக்கி வைக்கையில் அவர் பின்புறம் இடித்து ஒரு புத்தக அடுக்கு தரையில் சரிந்தது. 'எதுக்கு இத்தனைப் புத்தகம்? எல்லாம் படிக்கிற மாதிரி பாவலா' என்று சீதாப்பாட்டியைத் திட்டிக்கொண்டு தரையில் தவழ்ந்து எல்லாப்புத்தகங்களையும் அள்ளினார். அந்த அமர்க்களத்தில் சீதாப்பாட்டி உள்ளே வந்ததை அவர் கவனிக்கவில்லை.
"வாட் ஐஸ் ஆல் திஸ்? வொய் ஆர் யு மெஸ்ஸிங் அரௌண்ட் ஹியர்?" என்ற குரல் கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது.
"ஹி ஹி, கடலை மடிக்கப் பேப்பர் தேடினேன் சீதே." என்று உளறினார்.
"உங்களுக்கு பொட்டலம் கட்ட என் புக்ஸ் தான் கிடைத்ததா?"
"இல்ல சீதே, அப்படியே படிக்க தில்லானா மோகனாம்பாள் நாவல் இருக்கான்னு பாத்தேன்."
"அது மாடில இருக்கு, ஆனா நீங்க எப்போ புத்தகம் படிக்க ஆரம்பிச்சீங்க? அது என்ன பேப்பர்? குடுங்க" என்று கையில் இருந்த தாள்களை பிடுங்கிக்கொண்டாள்.
தலை தப்பித்ததே போதும் என்று அப்புசாமி தப்பித்து வெளியே வந்தார்.
சீதாப்பாட்டி சில நிமிஷங்கள் ஏதோ செய்துவிட்டு வெளியே சென்றுவிட்டார். மறுபடியும் அந்த அறைக்குப்போய் எல்லாவற்றையும் கலைக்கவேண்டுமா என்று அப்புசாமிக்குக் குழப்பம். 'கிழவி ஏதாவது அடையாளம் வைத்துவிட்டுப் போயிருப்பாள். நாம் மறுபடி எதையாவது கலைத்தால் மாட்டிக்கொள்வோம்' என்று எண்ணியவாறே உள்ளே சென்றார். சீதாப்பட்டியின் கணினி திறந்திருந்தது. அவருக்கு அதைத் தொடத் தயக்கம். அப்போது வாசலில் எதோ ஆள் அரவம் கேட்டது. பார்த்தால் ரசகுண்டு! அவன் மைத்துனனை அழைத்து வந்திருந்தான்.
மைத்துனன் சிறு பையனாக இருந்தான். கலைந்த தலை, அரை நிஜார், காரே மூரே என்று கிறுக்கிய சட்டை, பளீர் சிரிப்பு. பெயர் மதிவாணனாம். அப்புசாமிக்கு அவனைப் பார்த்ததும் பிடித்து விட்டது. ரசகுண்டுவிடம் விஷயத்தைக் கேட்டவுடன் பா. மு. க. தலைவி எழுதிய மாதிரி ஒரு கடிதம் எழுதிவிட்டானாம். லெட்டர்ஹெட் வாங்க வந்தார்களாம்.
கணினி திறந்திருந்ததைக் கேட்டவுடன் சுறுசுறுப்பானான். 'பேப்பர் தேவையில்லை தாத்தா! நேராக ஈ-மெயில் அனுப்பிடலாம்'. என்று உள்ளே வந்தான். 'அவுட்லுக், ஜீ-மெயில்' என்று என்னென்னவோ சொல்லிக்கொண்டு சரியான இடத்தைக் கண்டுபிடித்துவிட்டான். அப்புசாமிக்கு அவருடைய காவல் தெய்வமே உதவிக்கு வந்ததுபோலத் தோன்றியது.
ரசகுண்டுவை வெளியே காவலுக்கு வைத்துவிட்டுப் பத்து நிமிஷங்கள் எதோ பேசிக்கொண்டே தான் கொண்டுவந்த நோட்டுப்புத்தகத்தில் இருந்த கடிதத்தை அடித்து முடித்துவிட்டான்.
அமெரிக்க அதிபருக்கு அந்தக் கடிதத்தை அனுப்பிவிட்டு, ஒரு பிரதி 'மூன் செய்திகள்' என்ற சானலுக்கும் அனுப்பிவிட்டானாம்.
எல்லாவற்றையும் மூடிவிட்டு வெளியே வந்தார்கள். அப்புசாமிக்கு உலகமே பளீர் என்று தெரிந்தது. ரசகுண்டுவை 'நண்பேண்டா' என்பதுபோல் பார்த்தார். 'மதித்தம்பி, நீ வேற லெவல். கெழவி அப்படியே பேஜார் ஆகப்போறா பாரு. உனக்கு பரோட்டா சால்னா வாங்கித்தரேன், வா!', என்று பிரியத்துடன் அழைத்துச் சென்றார்.
பரோட்டா கடையில் மதிவாணனை இருவரும் அரசியல்வாதியை அடிவருடிகள் புகழ்வதுபோல் சிலாகித்தார்கள். அவன் வேண்டாம், வேண்டாம் என்று சொல்லியும், பொருட்படுத்தாமல் அவன் கையில் சில ரூபாய்த் தாள்களைத் திணித்தார் அப்புசாமி.
பரோட்டா கடையில் ஒரு ஆள் இவர்களை உற்றுப் பார்ப்பதுபோல் அப்புசாமிக்குத் தோன்றியது. ஆனால் அவன் ஆண்பிள்ளையாக இருந்ததால் அவர் அதைப்பற்றி ரொம்பக் கவலைப் படவில்லை.
அவர் திரும்பி வரும்போது சீதாப்பட்டி அலுவலக அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நல்ல பிள்ளையாய் உடையை மாற்றிக்கொண்டு நன்றாகத் தூங்கினார். கனவில் டிரம்ப் மற்றும் அபர்ணா இருவரும் வந்தார்கள். டிரம்ப் தன் கையால் லட்டு பிடித்துப் பரிமாறினார். அபர்ணா 'ஊட்டி விடட்டுமா' என்று கேட்டாள் .
தொடரும்
Pic credit: ChatGPT
No comments:
Post a Comment