பிறைமதி தூங்கும் நடுநிசி நேரம்
மழையில் குளித்த மரங்களில் ஈரம்;
காரினும் இருண்டக் கானகப் பாதை,
கடக்கும் கோமகன் ஒருவனின் காதை.
கண்களில் கிறக்கம், சொல்லொணாக் கலக்கம்
காதங்கள் கடந்த கால்களில் நடுக்கம்;
கட்டிய ஆடைகள் மடிப்பினுள் மயங்கி
கண்துயி லும்ஓர் கார்நிறக் குழந்தை.
'இறைவனே இந்த இரவின் பயணம்
இன்பயன் தருமோ, விடியலின் வெண்கதிர்
இச்சேய் காணுமோ இனிதே வாழுமோ?
ஈரமில் இதயத்து மைத்துனன் கோபம்
தணியுமோ இவ்வுயிர் தரிக்குமோ' என்று
கனிந்தான்,கரைந்தான், சோர்வில் அமர்ந்தான்.
கால்கள் துவண்டன, கண்களும் மூடின.
கண்ணயர் நேரம் காதுகள் விழித்தன.
'கானக ஓசைகள் நடுவே கேட்பது
கம்சனின் சேனையோ, ஒற்றனோ, மற்றனோ,
கள்வர் கூட்டமோ, கானக மாந்தரோ,
கற்பனையோ இந்தக் காலடிச் சத்தம்?’
ஐயத்தில் அம்மகன் அச்சுறு நேரம்
அவ்வழி வந்தான் அருள்தரும் மாமுனி.
செவ்வழி செய்யும் நாரணன் நாமம்
வாய்வழி ஓதியே, வீணையை மீட்டியே,
நால்திசை நடந்து நல்லிசை பயின்ற
நாரத முனிவன், நாரணன் அடியன்,
நன்மகன் நலக்க வாழ்த்துகள் சொன்னான்.
கோமகன் அவனும் முனிவனை வணங்கி
தன்நிலை விளக்கி தவிப்பினைச் சொன்னான்:
“என்மகன் வாழ என்குலம் தளிர்க்க
நன்வழி தாரீர், நல்லுரை சொல்வீர்!
நண்பனின் அகத்தில் தோன்றிய பெண்ணை
என்மகள் என்று கொண்டால் அச்சிசு
விண்ணகம் ஏகுமோ, என்வினை மீறுமோ?
புன்செயல் செய்யும் கொலைவாள் கொதித்து
அன்னத் தாருயிர் மாய்க்குமோ, சாய்க்குமோ?
வேறிடம் போகும் என்மகன் வாழ்க்கை
மாறினும் நன்றே! ஆயினும் அவனைக்
காரிருள் ஒத்த நெஞ்சுடைக் கம்சனின்
பேரிடர் அச்சம் துரத்திக் கொல்லுமோ?”
நன்னகை பூத்து நாரதன் சொல்வான்
“நடப்ப தெல்லாம் நாரணன் செயலாம்.
நந்த கோபனின் நன்மகள் விசனம்
சிந்தையில் நீக்கு, இறைவழி நோக்கு.
அந்த நன்மகள் தனிப்படச் சென்றே
அந்தகன் பிடியைத் தன்வழித் தவிர்ப்பாள்.
உந்தன் செல்வனும் மாமனின் சூதுகள்
எந்த நாளும் வென்றிட வையான்.
உம்மகன் வளர நானிலம் செழிக்கும்,
செம்மைகள் செறிந்தே கோகுலம் களிக்கும்,
இம்மையின் கடமைகள் தர்மங்கள் தெளியவே
இம்மகன் சொல்வான் வேதத்தின் சாரம்.
மானுடர் வழிபடத் தத்துவம் சொல்வான்,
மன்னவர் நெறிபடத் தூதுகள் செல்வான்,
மணிமுடி வேண்டான் ஆயினும் ஆள்வான்,
மண்மகள் பாரம் தீர்ந்திடச் செய்வான்.
கோபிகள் களிக்க நர்த்தனம் செய்வான்
பாபிகள் மீளவும் பரிவுரை சொல்வான்
துருபதன் குடியின் மானமும் காப்பான்
துவாபர யுகத்தினைக் கலியுடன் சேர்ப்பான்.
மழைமே கங்கள் மறைத்த கதிர்போல்
மதியிலார் ஆட்சி மாநகர் கொண்டது.
மதுரா மாநகர் மீட்டிட வருவான்
மாமதக் களிறாய் மாதவ மைந்தன்.”
வணங்கியே வசு தேவனும் எழுந்தான்.
வழியினில் தொடர்த்து வல்நடை சென்றான்.
வானவன் கானம் காதினில் கேட்டது.
வலிமை பல்வழி மனதில் மூண்டது.
கார்நிறக் குழந்தை கண்களைத் திறந்தது;
கனவினின் எதிரொலி போலது சிரித்தது.
கானகம் ஒளிர்ந்தது, காற்றும் சிலிர்த்தது.
காசினி உய்ந்திடப் பாதையும் பிறந்தது!!
© #ஆனந்தக்கவிராயர்