ரஜினி: "சாமி, எனக்கு எதோ ஒரு பயோபிக் ரோல் வெச்சுருக்கீங்கன்னு சொன்னாங்க."
ரவிக்குமார்: "ஜோ பைடனோட கதை பண்றோம். நீங்கதான் பைடன்."
"நான் எதுக்கு சாமி, வேற யாரையாவது போடலாமே?"
"உடம்பு சரியில்லைன்னு ஜகா வாங்கறத உங்கள விட யார் சார் நல்லா பண்ணமுடியும்?"
(சந்தேகத்துடன்): "என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலியே?"
"சேச்சே! வெள்ளைகாரங்க ரோல் உங்களுக்கு புதுசில்ல. நீங்க “ஒரு கூடை sunlight ஒரு கூடை moonlight” கூட பண்ணீங்களே?"
"இல்ல, அது அந்த சங்கர் சாமி வேலை! எனக்கு எப்பவுமே வெள்ள பெயிண்ட் அடிச்சுட்டு நடிச்சா ஏதும் சொல்லுவாங்கன்னு ஒரு பயம்"
"அதெல்லாம் இல்லீங்க. 'என் பிரதர் ஜஸ்டின் ட்ருடோ சொல்லிக் குடுத்தாரு'ன்னு சொல்லுங்க!"
"அப்ப வயசான ரோல்தானா? என்ன இருந்தாலும் என் ரசிகர்கள் ஒத்துப்பாங்களான்னு கொஞ்சம் தயக்கம்! வேற ஏதாவது கதை வெச்சிருக்கீங்களா சாமி?"
"'இந்தியன் - 1/2' ன்னு ஒரு கதை. கமலா ஹாரிஸ்ஸோட பயோபிக். ஆனா பேரைக்கேட்டவுடன் கமல் நான் தான் பண்ணுவேன்னு பிடிவாதம் பிடிச்சார். கமலா மாதிரி மேக்கப் எல்லாம் போட்டுக்கிட்டு பஸ் புடிச்சு வீட்டுக்கு வந்துட்டார். தர்ம சங்கடமா போச்சு. அதுலேர்ந்து மாத்தின கதை தான் இது."
ரஜினி இன்னும் தயங்குகிறார்.
"இந்த படத்துல வேணும்னா டபுள் ரோல் ஆக்கிடலாம். நீங்க பைடன் வேஷமும் போடறீங்க, பையன் வேஷமும் போடறீங்க. பையனுக்கு ஒரு டான்ஸ். 'ஆசை நூறுவரை வாழ்வின் நூறு சுவை வா!'"
"அந்தப் பையன் ஜெயிலுக்கு போனாருல்ல?"
"ஆமாம், அந்த இடத்துல "உலக வாழ்க்கையே ஒரு ஜெயிலு வாழ்க்கைதான்! அதுல உலவும் பேரெல்லாம் ஒரு கைதி போலத்தான்" அப்படின்னு ஒரு தத்துவப்பாட்டு!"
"கொஞ்சம் பஞ்ச் டயலாக் வேணுமே?"
"ஒங்க பழைய டயலாக் சிலதை எடுத்து பைடனுக்கு ஏத்த மாதிரி மாத்திடலாம்.
'நான் எப்ப போவேன், எப்படி போவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, கழுத்தைப் புடிச்சு தள்றவரைக்கும் போகமாட்டேன்!'
'நான் ஒரு தடவை சொன்னா ... நூறு தடவை கேட்டாலும் புரியாது!'
'என் வழி தனி வழி. அப்புறம் என் பொண்டாட்டி வந்து மேடையிலிருந்து இறக்கி கூட்டிட்டு போவா!' "
"அந்த கடைசி டயலாக் வேண்டாமே! கொஞ்சம் வயசானவங்கள கிண்டல் பண்ற மாதிரி இருக்கு!"
"அந்த டயலாக் இல்லாட்டி ஹீரோயின் நடிக்க மாட்டேன்னு சொல்றாங்க. அவங்கதான் ஜில் பைடன் வேஷம் பண்ணனும்!"
"யாரு ஹீரோயின்?"
"ஏமி ஜாக்சன்."
"அப்படின்னா சரி. வச்சுக்குங்க! யாரு மியூசிக்?"
"நம்ம அனிருத் ப்ரோ!"
"அந்தப் புள்ளாண்டான் மட்டும் வேணாமே! பாட்டு நல்லால்லன்னு சொன்னா வீட்டுல தகராறு வரும். ரீ-ரெகார்டிங் வேற ஒரு தொல்லை - போன படம் பிரிவியூ பாத்துட்டு ஒரு வாரம் காது கேக்கலே!"
"சரி விடுங்க. நான் ரஹ்மானை வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்!"
"வில்லன் யாரு?"
"வில்லன் இல்ல, வில்லி. நம்ம கமலா ரோல்க்கு ரம்யா கிருஷ்ணன் வராங்க. அவங்க முதல்ல வெள்ளை மாளிகைலேர்ந்து உங்கள தொரத்திட்டு அப்புறம் , 'வயசானாலும், உன், ஸ்டைலும் அழகும் உன்னை விட்டு போகலை" அப்படின்னு பேசறாங்க! நீங்க "விடுகதையா இந்த வாழ்க்கை?" ன்னு பாடிக்கிட்டு மெதுவா நடந்து போறீங்க."
"அட, இது நல்லாருக்கே! செண்டிமெண்ட்! செண்டிமெண்ட்! அது சரி, நீங்க உங்க எல்லா படத்துலயும் தலையைக் காட்டுவீங்களே, இதுல?"
"நானு டிரம்ப் வேஷத்துல வரேன். நானும் நீங்களும் கோல்ப் ஆட்டிக்கிட்டே "என்னம்மா கண்ணு சவுக்யமா" அப்படின்னு ஒரு டூயட்."
ரஜினி இன்னும் தயக்கத்துடன், "சரி, நீங்க சொல்றீங்களேன்னு பண்றேன். ஆனா ஒரு கண்டிஷன்".
"என்ன சார்?"
"என் பொண்ணு என் அடுத்த படத்துல அனிமேஷன் டைரக்டர் ரோல் வேணும்ன்னு பிடிவாதம் பிடிக்கிறா. அவளுக்காக ரெண்டு அனிமேஷன் பாட்டு சீன்".
(தயக்கத்துடன்). "சரி சார், யோசிச்சுட்டு சொல்றேன். நான் கிளம்பனும்."
"இருங்க சாமி, ஒரு கதை சொல்றேன். ஒரு தவளை ஒரு சாமியாரைப் பார்க்கப் போச்சாம்."
"இல்லை சார். ரொம்ப அர்ஜென்ட் . நான் கிளம்பணும். நாளைக்குப் பார்க்கலாம்!"
Pic credit: Wikimedia commons.
No comments:
Post a Comment