Tamil Poem - தமிழ்மகளின் தாகம்

 

avvaiyar





முதுமகள்  ஒருத்தி நாடுகள் கடந்து 

காட்டு வழியில் பயணம் புரிந்தாள்.

தலைமேல் தகித்த திகிரியின் கதிரால் 

நிழலது குறுகவே அடிசுட நடந்தாள்.


காட்டினம் பலவும் மயங்கிடும் மதியம், 

சூட்டினால் மரங்களும் வாடியே துவளும். 

பாட்டியோ சோர்விலா நடையோடு சென்றாள். 

மேட்டையும் முகட்டையும் மணிகளில் கடந்தாள்.


வறண்ட வெளிகள் கடந்த வேளையில் 

மரங்கள் அடர்ந்த சோலையைக் கண்டாள் 

நிறங்களின் குளிர்போல் நீரினின் குளிரும் 

விழைந்தவள் சோலையின் சாலையில் சென்றாள் 


இடையன் ஒருவன் இனிய குரலில் 

இன்னிசை பயின்றான், கையினில் கோலொடு, 

இலைகளின் நடுவே, கிளைகளில் சாய்ந்தே.  

மலைகளும் மயங்கும் குறிஞ்சியின் கீதம்.


மாக்கள் பலவும் மலைத்தன இசையில் 

மயில்கள் மயங்கின, மான்கள் சிலையென 

நிலைத்தன, நின்றன, சூழ்நிலை மறந்தன

கலைமழை நின்றும் கலையா நின்றன.


நிலையினைக் களைப்பினால் உணரா மாமகள் 

குலைத்தாள் அந்த அமைதியின் அரங்கை.

'பெரியோர் வந்தால் ஆசிகள் பெறுதலும்,

அறிமுகம் கூறலும் சிறுவருக் கழகு'


‘மலைத்தாய் மகன்நான் மரபுகள் அறிந்திலேன் 

இளையன், இடையன், மலைவாழ் மனிதன், 

மாடுகள் மேய்ப்பேன் அகம்அயல்  காப்பேன்; 

செப்பும்பேர் ஒன்றில்லை சொல்புகழ் இல்லை.


அம்மையே உன்முகம் அருளினால் ஒளிருது

அறிவின் சுடருடன் அழகும் மிளிருது 

அறிமுகம் சொல்வாய் ஆசிகள் செய்வாய்!'

அன்புடன் சொன்னான் கானகச் செல்வன்.


‘தமிழ்த்தாய் பெற்ற தலைமகள் என்பர், 

அமிழ்தினும் இனிய கவிதைகள் இசைப்பேன்; 

நிமிடத்தில் இலக்கியம், கணங்களில் கவிதைகள்;

அறியாப் பொருளெதும் தமிழினில் இல்லை; 


கங்கையை அணிந்தவன் அகத்தில் பாகமாம் 

மங்கையின் அருளில் மலர்ந்த புலமையில்,

செங்கரம் தூக்கித் தமிழ்த்தாய் வாழ்த்த, 

என்கையால் எழுதினேன் ஈடிலாக் கவிதைகள்.


துங்கக் கரிமுகத்துத் தேவன் அருள்கொண்டு 

மங்கா அறிவுடன் சுடர்விடும் கவிநான்.

அரசர் நன்னெறி நடக்கப் பல்வழி 

அறவுரை சொல்வேன் ஒளவைஎன் றழைப்பர்”


இவ்வுரை ஒளவையின் வாய்வழிக் கேட்டு 

இன்னகை செய்தே இளையவன் சொன்னான்,

'இவ்வழிச் செல்லும் செவ்விய மாந்தர் 

இவ்விடம் அறிமுகம் சொல்லிய துண்டு.


பாவலர், நாவலர், காவலர், வாணிகர் 

நானிலம் ஆளும் செங்கோல் வேந்தர்

யாவரும் யாத்திரை இவ்வழிச் செல்வர் 

ஆயினும் தன்புகழ் தன்வாய் உரையார்!'


முதியவள் முறுவல் செய்தே சொல்வாள் 

'அதியன் மதிக்கும் புலமை கொண்டேன், 

அதிகம் இல்லை; மதிமிகு சான்றோர்  

மதிப்பில் என்சொல் மிகைஎது மில்லை.


அறம்செய விரும்பும் அரசர் பலரின் 

ஆறிய சினங்கள் ஆற்றிய வள்நான். 

இளமையைத் தந்து இறைமையைக் கண்டேன். 

ஈசனின் அருளினால் தமிழ்க்கவி தந்தேன்! 


நண்பகல் சுடரினால் அல்லல் மிகுந்தேன் 

நாவது வறண்டு நீர்வளம் விழைந்தேன் 

நாவல் மரத்தில் நற்கனி கண்டேன் 

நன்செயல் செய்வாய், கனிசில கொய்வாய்!'


'அன்னையே உன்சொல் என்னுடை வேதம், 

நாவினின்  வேட்கையைத் தணிப்பதென் பாக்கியம், 

சடுதியில்  கொய்வேன், உன்மனம் சொல்வாய், 

சுடும்பழம் வேண்டுமோ சுடாப்பழம் வேண்டுமோ?'


குழம்பிய மனதுடன் ஒளவையும் சொல்வாள்,

'பழங்களும் சுடுமோ? பார்ப்போம் விந்தையை!'

சிரிப்புடன் பாலனும் மரக்கிளை  உலுக்கினான்

சிந்தின, சிதறின கார்நிறக் கனிகள்.


புழுதியில் விழுந்த நாவல் கனிகளை 

பாட்டியும் ஊதினாள், புசித்தாள், ரசித்தாள்

பாலகன் நகைத்த  முகத்துடன் கேட்டான்,  

பழமென்ன சுட்டதோ, ஆற்றுதல் பட்டதோ?'


கர்வம் கலைந்த மனதுடன் மாதவள் 

உருவம் குறுகிக் கனிந்து பணிந்தாள்.

'செருக்கு எந்தன் சிந்தையை மறைத்தது. 

செந்தில் வேலனை அறிந்தேன், தெளிந்தேன்.


சூரனை வதைத்த சுந்தரக் கரங்கள்,  

மாலுடன் விளையாடும் மங்களக் கரங்கள், 

வேலினைத் தாங்கிடும் வல்லிரு கரங்கள், 

மெலியளென் வேட்கை தணித்திட வந்தவோ?


சண்முகா, வேலவா, தேவரின் காவலா, 

என்கடன் உன்பெயர் நாளுமே பாடுதல். 

மண்ணிலும் விண்ணிலும்  உன்புகழ் ஒலிக்க,

திண்ணிய தமிழில் பாடவே அருள்வாய்.’


‘அம்மையே ஒளவையே, அமிழ்தெனும் தமிழிலே 

இம்மையும், மறுமையும், செம்மையின் மொழியிலே 

தேனினும் இனிய பாடல்கள் புனையவே  

இன்னருள் புரிந்தேன், நன்றுநீ வாழ்வாய்!’


© #ஆனந்தக்கவிராயர் 


Pic credit: Sujatha C.



No comments:

Post a Comment