அப்புசாமியும் அமைதிப் பரிசும்! (Part 3 of 3)

 




கனவு கலைந்து எழுந்தபோது விடிந்திருந்தது. ரசகுண்டு, பீமா இருவரையும் நாயர் கடைக்கு வரச்சொல்லி இருக்கிறோம் என்று நினைவு வந்தது. சுறுசுறுப்பாகத் தயாராகி வெளியே கிளம்பினார். லுங்கியுடன் வெளியே கிளம்பினால் சீதாப்பாட்டியிடம் திட்டு விழலாம் என்று தோன்ற, உடை மாற்றிக் கிளம்பினார்.


கீழே வரும்போது சீதாப்பாட்டி யாரிடமோ தொலைபேசியில் விவாதம் செய்வது கேட்டது. "இட்ஸ் ரிடிகுலஸ். எதாவது கேள்விப்பட்டால் தகவல் சரியா தப்பா  என்று சம்பந்தப்பட்ட மனிதர்களிடம் விசாரிக்க மாட்டீர்களா? தகவல் என்னிடமிருந்து வந்திருக்க வாய்ப்பே இல்லை".


இதைக்கேட்டதும் தன்னை எதுவும் கேட்குமுன் நழுவிவிட வேண்டும் என்று கொல்லைப்புற வழியாக சுற்றி வெளியே வந்தார். "சீதே, உனக்கு நல்லா  வேணும், செய்திக்காரர்களிடம் நல்லா மாட்டினே!" என்று புன்னகைத்துக்கொண்டே தெருவில் இறங்கினார். தெரு முனையில் மறுபடியும் ஓர் ஆள் அவரைத் தீவிரமாகப் பார்ப்பதாகத் தோன்றியது. அனால் நேற்றுப் பார்த்த அதே ஆளா என்று தெரியவில்லை. இவன் பேண்ட் சட்டை போட்டிருக்கிறான். ரெட்டை மண்டை. நேற்றுப் பார்த்தவன் கைலி கட்டியிருந்தான். முகம் நினைவில்லை, 


நாயர் கடையில் அவர் நண்பர்கள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். சீதாப்பாட்டியின் வாக்குவாதம் பற்றிக் கேட்டவுடன் இன்னும் சந்தோசம். ஒரு டீ சொல்லிவிட்டு பெஞ்சில் உட்கார்ந்த பொது போன் "கிளுங்" என்றது.


அபர்ணா! 


அவள் "குட் டே காஃபி ஷாப்" என்ற இடத்தில் சந்திக்க முடியுமா என்று கேட்டிருந்தாள். 'ஐஃபோன் இல்லாமல் எப்படிப் போவது?' என்று சிறிது நேரம் யோசித்து விட்டு உடனே வருகிறேன் என்று தகவல் அனுப்பினார். டீயைக்  கேன்சல் செய்யச் சொல்லிவிட்டு நடையைக் கட்டினார்.


வழியெல்லாம் ஐஃபோன் கொண்டு வராததற்குச் சொல்லக்கூடிய காரணங்கள் யோசித்துக்கொண்டே போனார். 


காப்பிக்கடை நல்ல செழிப்பாகவே இருந்தது.  பல நிறங்களில் மலர்களோடு வரிசையாகப் பூந்தொட்டிகள் வைத்திருந்தார்கள். அபர்ணாவைக் காணோம். அவர் அமர்ந்தவுடன் ஒரு பெண் மெனு கார்டை பவ்யமாகக் கொண்டு வைத்தாள். அதைப்பார்த்தவுடன், 'என்னது, ஏலக்காய் டீ முன்னூத்திச் சொச்சமா?' என்று அதிர்ந்தும், வெளியே, 'நண்பருக்காகக் காத்திருக்கிறேன்' என்பதுபோல் எதுவோ சொன்னார். பரபரப்பில் என்ன சொன்னோம் என்று அவருக்கே தெரியவில்லை.


ஐந்து நிமிடத்தில் அபர்ணா வந்தாள். பளிச்சென்ற புன்னகை. அவரின் நலம் விசாரித்தாள். அவர் கையில் இருந்த ஃபோனைப்பார்த்ததும் அவள் முகம் கொஞ்சம் மாறியதோ என்று அப்புசாமிக்கு சந்தேகம். னால் ஒன்றும் கேட்காமல் அந்த போனையும் கையில் எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.


அபர்ணாவின் தலைக்குப்பின்னே இருந்த  டிவியில் எதோ பரிச்சயமான முகம் தெரிந்தது. பார்த்தால் வாயெல்லாம் பல்லாக சீதாப்பாட்டி! வியப்பில் அபர்ணாவை மறந்துவிட்டு சீதாப்பாட்டி என்ன சொல்கிறார் என்று கேட்க ஆரம்பித்தார். "அஃப் கோர்ஸ் நாங்கள் எல்லாம் அவரின் விசிறிகள். உலக அமைதிக்காக அவர் எடுக்கும் எஃப்போர்ட் எங்கள் எல்லோருக்கும் பிரமிப்பைக் கொடுத்தது". பின்னணியில் டிரம்ப் எழுதிய ஒரு ட்ரூத் சோசியல் செய்தியைக் காண்பித்தார்கள். ‘சீதாலட்சுமி என் நெடு நாளைய நண்பர். எனது விசிறியும் கூட. அவர் கொடுக்கும் அமைதிப் பரிசை நான் பெரிய பெருமையாகக் கருதுகிறேன்’ என்று எழுதியதோடில்லாமல், தான் சீதாப்பட்டியிடம் பரிசு வாங்குகிறாற்போல் சித்தரித்த படம் ஒன்றையும் இணைத்திருந்தார். ஆங்கிலத்தில் இருந்தாலும் அப்புசாமிக்கு  ஓரளவு புரிந்தது.


பாட்டி பேசுவதைப் பதிவு செய்ய பலவித டிவி சேனல்கள் சுமார் இருபது மைக்குகள் வைத்திருந்தார்கள். எல்லோரும் ஒரே சமயத்தில் ஏதேதோ கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள்.


அதற்குள் அபர்ணா ஒரு வினோதமான காரியம் செய்தாள். அப்புசாமியின் பின்னால் இருந்த யாரையோ பார்த்து அவள் பயந்ததாகத் தெரிந்தது. 'விலுக்' என்று எழுந்தாள். இடது புறம் இருந்த தடுப்புச் சுவரை அணுகினாள். அதன்மேல் இருந்த சில பூந்தொட்டிகளை சுவற்றுக்கு அப்பால் வெளியே தள்ளிவிட்டாள். அந்தச் சுவற்றில் ஏறி வெளியே குதித்து ஓடினாள். அப்புசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னாலிருந்து ஒரு ஆள் ஓடிவந்து அதே மாதிரி அவனும் ஏறி குதித்துத் துரத்தத் தொடங்கினான். அதே ரெட்டை மண்டை ஆள்! எல்லாம் வெகு விரைவில் நடந்து விட்டன.


அப்புசாமிக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்தது. யாரவன், ஒரு இளம் பெண்ணைப் பட்டப் பகலில் துரத்துகிறான்? போலீசைக் கூப்பிட வேண்டும்.


போனைத் தேடினார். காணோம்! அதையும் அபர்ணா எடுத்துக்கொண்டு  ஓடிவிட்டாள்!


அப்புசாமி கீழே இறங்கித் தெருவில் பார்த்தார். ஓடின இருவரையும் எங்கும் காணவில்லை. அவர் தலையில் மறுபடியும் தலையில் இடி விழுந்தது. 'கிழவியிடம் இன்னொரு போன் காணோம் என்று எப்படிச் சொல்வது?' என்று எண்ணிக்கொண்டே கால் போன போக்கில் எங்கேயோ போனார். இந்த அவமானத்தை ரசகுண்டு, பீமாவிடம்கூட சொல்ல வெட்கமாக இருந்தது.


'ஆனால் அபர்ணா நல்ல பெண். எப்படியாவது போனைத் திருப்பிக் கொடுத்துவிடுவாள். ஆனால் அதுவரைக்கும் எப்படி சமாளிப்பது? அவள் நம்மை எப்படித் தொடர்பு கொள்வாள்? அவளைத் துரத்தின ஆள் யார்?'


பூங்காவில் கொஞ்ச நேரம் உட்கார்ந்தார். மதிய நேரம் வந்தது. ஆனால் பசி இல்லை. வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தன. மறுபடி கொஞ்சம் சுற்றி விட்டு ஒரு வழியாக மாலை ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்தார். 


அவர் உள்ளே வரும்போது சீதாப்பாட்டி வரவேற்பறையில் சில நண்பிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்புசாமியைக் கண்டவுடன் முகம் மலர்ந்து, "எங்கே போய்விட்டீர்கள்? போலீஸ் ஸ்டேஷனிலிருந்து இன்ஸ்பெக்டர் துரைமுருகன் வந்து  உங்களுக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தார். அந்தக் கும்பலைப் பிடித்து விட்டார்களாம். உங்களை ஸ்டேட்மென்ட் எழுதிக்கொடுத்து விட்டு உங்கள் போனை வாங்கிப்போகச் சொன்னார்கள்."


அப்புசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. "சீதே, கொஞ்சம் மாடிக்கு வரியா?" என்று கேட்டார்.


மாடியில் சீதாப்பாட்டி: "உங்களுடன் பேசிக்கொண்டிருந்த பெண் ஒரு மோசடிக்கும்பல் தலைவி. சுத்த பிராடு. வயசானவர்களிடம் போன் ஆப் வழியாக அவர்கள் பென்ஷன் பணத்தைக் கொள்ளை அடிக்கும் கும்பல். இன்ஸ்பெக்டர் என்னிடம் சொன்னபோது உங்களிடம் கொள்ளை ஒன்றும் அடிக்க முடியாது, உங்களிடம் பணமே இல்லை என்று சொன்னேன். மிஸ்டர் துரைமுருகன் முதலில் உங்களையும் சந்தேகித்ததாகவும் இரண்டு நாட்கள் பின் தொடர்ந்ததில் உங்களுக்கு அந்த அளவு சாமர்த்தியம் கிடையாது என்று தெரிந்து கொண்டதாகவும் சொன்னார். 'ஆமாம், என் ஹஸ்பண்டுக்கு கொஞ்சம் விவரம் போதாது', என்று நானும் ஒப்புக்கொண்டேன். உங்களிடம் ஸ்டேட்மென்ட் மட்டும் வேண்டுமாம்."


அப்புசாமி திறந்த வாய் மூடாமல் இதை எல்லாம் கேட்டார், வார்த்தை ஒன்றும் வரவில்லை.


"சரி, கொஞ்சம் இருங்கள். மிஸஸ் பொன்னப்பன் எனக்காகக் காத்திருக்கிறாள். இன்று வந்த நல்ல நியூஸால் பல பேர்கள் எங்கள் பில்டிங்க்காக டொனேஷன் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். வீ ஆர் கெட்டிங் மோர் மணி தேன் வீ கேன் ஹாண்டில். அதைப்பற்றிப் பேசிவிட்டுப் பத்து நிமிஷத்தில் வருகிறேன். உங்களை நானே போலீஸ் ஸ்டேஷன் வரை அழைத்துப் போகிறேன். ஓ, உங்களுக்குக் காலையில் நடந்த விஷயங்கள் தெரியாது இல்லையா? அதையும் சொல்கிறேன்.", என்றார்.


"சீதே, சாப்பிட எதாவது இருக்கா? பசி தாங்கலை. வயத்துக்குள் சுண்டெலி ஓடுது", என்றார் அப்புசாமி.


முற்றும்!


(Appusamy stories, அப்புசாமி கதைகள்)



Pic credit: Grok.

அப்புசாமியும் அமைதிப் பரிசும்! (Part 2 of 3)

 



அடுத்த நாளும் சீதாப்பாட்டி அதிகம் பேசவில்லை. அப்புசாமியும் ஒன்றும் பேசாமல் தன் வேலைகளைக் கவனித்தார். 


பீமாராவின் மனைவி இரண்டு நாட்கள் அண்ணன் வீட்டுக்குப் போதாகத் தகவல் கிடைத்தது. அதனால் அவனுடைய வீடு அவசர ஆலோசனைக்குத் தகுந்த இடம் என்று முடிவு செய்தார். ரசகுண்டுவையும் அங்கே வரச்சொல்லிவிட்டுக் கிளம்பினார்.


கிளம்பும் பொழுது அபர்ணாவிடம் இருந்து ஒரு தகவல் வந்தது. அவளுக்கு அப்புசாமியின் ஐபோனை மறுபடி ஒருமுறை பார்க்க வேண்டுமாம். உல்லாசமாக சீட்டி அடித்தபடி, "அடேய் அப்புசாமி, இன்னும் உன்னிடம் கொஞ்சம் காந்த சக்தி இருக்குடா!" என்று சொல்லிக்கொண்டார். அவளைப் பார்க்கப் போக ஆசைதான், அனால் போய்  என்ன சொல்வது என்று தெரியவில்லை. அதனால் தனக்கு கொஞ்சம் முக்கிய வேலைகள் இருப்பதாகவும், ஓரிரு நாள் கழித்து சந்திக்கலாம் என்றும் ஒரு செய்தி அனுப்பினார்.


பீமாராவ் வீட்டில் நுழைந்தபோது தூள் பகோடா வாசனை மூக்கைத் துளைத்தது. பக்கத்தில் இருந்த நாயர் கடையிலிருந்து பக்கோடாவும், டீயும் வரவழைத்திருந்தான். டீயை உறிஞ்சிக்கொண்டே அப்புசாமி பேச்சை ஆரம்பித்தார். "டேய் பீமா, ரசம், இந்த சீதேயோட தொல்லை தாங்கலை. அவளைப் பழி வாங்க ஏதாவது வழி சொல்லுங்கடா!"


"பழி, கிழியெல்லாம் வேண்டாம். பாவம் வயசானவங்க", என்றான் பீமாராவ். அவனுக்கு சீதாப்பட்டியைக் கண்டால் கொஞ்சம் பயம்.


"எங்க பேட்டைல ஒரு வஸ்தாத் இருக்கான். அவன்கிட்ட சொல்லி கொஞ்சம் பயமுறுத்தி வைக்கலாமா?", என்றான் ரசகுண்டு.


"அதெல்லாம் வேண்டாம். அவங்களுக்கு என்ன பிடிக்கும், அதுலேர்ந்து ஆரம்பிங்க தாத்தா", என்றான் பீமா.


"அவளுக்கு என்ன, அவளோட கிளப்தான். 'பாட்டிகள் முன்னற்றக் கழகம்' தான் அவளுக்கு உயிர்." 


"அப்ப அதுலேர்ந்து அவங்கள வெளியேத்த எதாவது வழி பாக்கலாம்", என்றான் ரசகுண்டு. பின்பு எதோ நினைத்துக்கொண்டு  "அவங்க லெட்டர்பாட் கிடைச்சா அவங்க எழுதினா மாதிரி ஒரு ராஜினாமாக்  கடிதம் எழுதிடுங்க".


"அத இங்கிலிஷ்ல எழுதணுமே", என்றார் அப்புசாமி. "எழுதினாலும் அவ போய் 'நான் எழுதலை'ன்னு சொல்லிடுவா".


"அப்ப அவங்க எழுதினா மாதிரி வேற யாருக்கவாது லெட்டர் எழுதணும். அவங்க எழுதலைன்னு தெரியறதுக்குள்ள பெரிய சங்கடமா ஆகணும்." 


கொறிக்க பக்கோடா தீர்ந்து போன பாதிப்பில் ரசகுண்டு டிவி ரிமோட்டை அழுத்தினான். செய்திகளில் அமெரிக்க அதிபர் டிரம்ப்  யாரிடமோ ஒரு வஸ்துவை வாங்கிக்கொண்டிருந்தார்.


"இது என்னடா வாங்கறார்? பல கைகள் சேர்ந்து ஒரு திருப்பதி லட்டு பிடிப்பது போல் இருக்கு?" என்றார் அப்புசாமி, தன் தொல்லைகளை மறந்து.


"அது ட்ரோபி தாத்தா. புட்பால் சங்கம் அவருக்கு அமைதிப் பரிசு கொடுக்கிறது."


"புட்பாலுக்கும் அமைதிக்கும் என்னடா சம்பந்தம்? எப்பப் பார்த்தாலும் ஒத்தனை ஒத்தன் உதைப்பான், இல்ல தள்ளுவான்".


ரசகுண்டு திடீரென்று பிரகாசமானான். "தாத்தா, பாட்டி லெட்டர்ஹெட்ல டிரம்ப்க்கு ஒரு லெட்டர் எழுதுங்க. பாட்டிகள் முன்னேற்றக் கழகம் அவருக்கு  ஒரு பரிசு கொடுக்கிறாங்கன்னு. பா. மு. க அமைதிப்  பரிசு!"


"அதுக்கும் இங்கிலீஷிலே எழுதணுமே!", என்றார் அப்புசாமி கவலையுடன்.


"என் மச்சான் எழுதுவான், காலேஜ் பையன். இங்கிலிஷ்ல பொளந்து கட்டுவான்," என்றான் ரசகுண்டு.


"நம்புவாங்களாடா?"


"ஒரு லெட்டர் எழுதிட்டு, டிவி சேனலுக்கு ஒரு காப்பி அனுப்பிடலாம். நம்பினாலும் நம்பாட்டியும் பாட்டியோட மண்டை காஞ்சிடும்" என்றான் பீமா.


இன்னும் கொஞ்சம் விவாதித்து கடைசியில் ஒரு வழியாக முடிவுக்கு வந்தார்கள். அப்புசாமி சீதாப்பாட்டியின் அறையிலிருந்து சில லெட்டர்ஹெட் தாள்களை எடுத்து வந்து முன்னூறு ருபாய் பணத்துடன் ரசகுண்டுவுக்குக் கொடுத்தால் அவன் மற்ற ஏற்பாடுக்களைப் பார்த்துக்கொள்வான்.


அன்று செவ்வாய்க்கிழமை. அன்று மாலை சீதாப்பாட்டி பா. மு. க காரியங்களை முடித்துவிட்டு ஒன்பது மணிக்குத்தான் வீடு திரும்புவாள். அப்புசாமிக்கு அந்த நினைவு வந்தவுடன் 'சீதேக்கிழவி வர்ரதுக்குள்ள லெட்டர்ஹெட் தேடி எடுக்கணும்' என்று வேகமாக நடந்து வீட்டை அடைந்தார். 

 

வீட்டில் யாரும் இல்லை. தன் சாவியால் வீட்டைத் திறந்து சீதாப்பாட்டியின் அறையை அடைந்தார். எதையும் கலைக்காமல் கவனமாகத் தேடினார். சிறிது நேர முயற்சிக்குப்பின் தேடியது கிடைத்தது. நாலைந்து தாள்களைக் கிழித்துக்கொண்டு எல்லாவற்றையும் மறுபடி அடுக்கி வைக்கையில் அவர் பின்புறம் இடித்து ஒரு புத்தக அடுக்கு தரையில் சரிந்தது. 'எதுக்கு இத்தனைப் புத்தகம்? எல்லாம் படிக்கிற மாதிரி  பாவலா' என்று சீதாப்பாட்டியைத் திட்டிக்கொண்டு தரையில் தவழ்ந்து எல்லாப்புத்தகங்களையும் அள்ளினார். அந்த அமர்க்களத்தில் சீதாப்பாட்டி உள்ளே வந்ததை அவர் கவனிக்கவில்லை.


"வாட் ஐஸ் ஆல் திஸ்? வொய் ஆர் யு மெஸ்ஸிங் அரௌண்ட் ஹியர்?" என்ற குரல் கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது. 


"ஹி  ஹி, கடலை  மடிக்கப் பேப்பர் தேடினேன் சீதே." என்று உளறினார். 


"உங்களுக்கு பொட்டலம் கட்ட  என் புக்ஸ் தான் கிடைத்ததா?"


"இல்ல சீதே, அப்படியே படிக்க தில்லானா மோகனாம்பாள் நாவல் இருக்கான்னு பாத்தேன்."


"அது மாடில இருக்கு, ஆனா நீங்க எப்போ புத்தகம் படிக்க ஆரம்பிச்சீங்க? அது என்ன பேப்பர்? குடுங்க" என்று கையில் இருந்த தாள்களை பிடுங்கிக்கொண்டாள். 


தலை தப்பித்ததே போதும் என்று அப்புசாமி தப்பித்து வெளியே வந்தார்.


சீதாப்பாட்டி சில நிமிஷங்கள் ஏதோ செய்துவிட்டு வெளியே சென்றுவிட்டார். மறுபடியும் அந்த அறைக்குப்போய் எல்லாவற்றையும் கலைக்கவேண்டுமா என்று அப்புசாமிக்குக் குழப்பம். 'கிழவி ஏதாவது அடையாளம் வைத்துவிட்டுப் போயிருப்பாள். நாம் மறுபடி எதையாவது கலைத்தால் மாட்டிக்கொள்வோம்' என்று எண்ணியவாறே உள்ளே சென்றார். சீதாப்பட்டியின் கணினி திறந்திருந்தது. அவருக்கு அதைத் தொடத் தயக்கம். அப்போது வாசலில் எதோ ஆள் அரவம் கேட்டது. பார்த்தால் ரசகுண்டு! அவன் மைத்துனனை அழைத்து வந்திருந்தான்.


மைத்துனன் சிறு பையனாக இருந்தான். கலைந்த தலை, அரை நிஜார், காரே மூரே என்று கிறுக்கிய சட்டை, பளீர் சிரிப்பு. பெயர் மதிவாணனாம். அப்புசாமிக்கு அவனைப் பார்த்ததும்  பிடித்து விட்டது. ரசகுண்டுவிடம் விஷயத்தைக் கேட்டவுடன் பா. மு. க. தலைவி எழுதிய மாதிரி ஒரு கடிதம் எழுதிவிட்டானாம். லெட்டர்ஹெட் வாங்க வந்தார்களாம்.


கணினி திறந்திருந்ததைக் கேட்டவுடன் சுறுசுறுப்பானான். 'பேப்பர் தேவையில்லை தாத்தா! நேராக ஈ-மெயில் அனுப்பிடலாம்'. என்று உள்ளே வந்தான். 'அவுட்லுக், ஜீ-மெயில்' என்று என்னென்னவோ சொல்லிக்கொண்டு சரியான இடத்தைக் கண்டுபிடித்துவிட்டான். அப்புசாமிக்கு அவருடைய காவல் தெய்வமே உதவிக்கு வந்ததுபோலத் தோன்றியது.


ரசகுண்டுவை வெளியே காவலுக்கு வைத்துவிட்டுப் பத்து நிமிஷங்கள் எதோ பேசிக்கொண்டே தான் கொண்டுவந்த நோட்டுப்புத்தகத்தில் இருந்த கடிதத்தை அடித்து முடித்துவிட்டான்.


அமெரிக்க அதிபருக்கு அந்தக் கடிதத்தை அனுப்பிவிட்டு, ஒரு பிரதி 'மூன் செய்திகள்' என்ற சானலுக்கும் அனுப்பிவிட்டானாம்.


எல்லாவற்றையும் மூடிவிட்டு வெளியே வந்தார்கள். அப்புசாமிக்கு உலகமே பளீர் என்று தெரிந்தது. ரசகுண்டுவை 'நண்பேண்டா' என்பதுபோல் பார்த்தார். 'மதித்தம்பி, நீ வேற லெவல். கெழவி அப்படியே பேஜார் ஆகப்போறா பாரு. உனக்கு பரோட்டா சால்னா வாங்கித்தரேன், வா!', என்று பிரியத்துடன் அழைத்துச் சென்றார்.


பரோட்டா கடையில் மதிவாணனை இருவரும் அரசியல்வாதியை அடிவருடிகள் புகழ்வதுபோல் சிலாகித்தார்கள். அவன் வேண்டாம், வேண்டாம் என்று சொல்லியும், பொருட்படுத்தாமல் அவன் கையில் சில ரூபாய்த் தாள்களைத் திணித்தார் அப்புசாமி.


பரோட்டா கடையில் ஒரு ஆள் இவர்களை உற்றுப் பார்ப்பதுபோல் அப்புசாமிக்குத் தோன்றியது. ஆனால் அவன் ஆண்பிள்ளையாக இருந்ததால்  அவர் அதைப்பற்றி ரொம்பக் கவலைப் படவில்லை.


அவர் திரும்பி வரும்போது சீதாப்பட்டி அலுவலக அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நல்ல பிள்ளையாய் உடையை மாற்றிக்கொண்டு நன்றாகத் தூங்கினார். கனவில் டிரம்ப், அபர்ணா இருவரும் வந்தார்கள். டிரம்ப் தன் கையால் லட்டு பிடித்துப் பரிமாறினார். அபர்ணா 'ஊட்டி விடட்டுமா' என்று கேட்டாள் .


Click here for part 3.



(Appusamy stories, அப்புசாமி கதைகள்)


Pic credit: ChatGPT


அப்புசாமியும் அமைதிப் பரிசும்! (Part 1 of 3)

 



ஆங்கிலத்தில் Fan Fiction என்று ஒரு வகை இலக்கியம் உண்டு.  தங்கள் அபிமான எழுத்தாளர் நடையில், அவரது பாத்திரங்களைக்கொண்டு அவரது ரசிகர்கள் படைக்கும் படைப்புகள்.  வுட்ஹவுஸின் ஜீவ்ஸ், வூஸ்டர் பாத்திரங்களும், ஹாரி பாட்டர் பாத்திரமும் பல ரசிகர்களால் மீண்டும் நடமாட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.

நான் சிறு வயதில் ரசித்த பாத்திரங்களில் அப்புசாமித் தாத்தாவும் சீதாப்பாட்டியும் முக்கியமானவர்கள். இவர்கள் பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் ஜ. ரா. சுந்தரேசனால் செதுக்கப்பட்ட பாத்திரங்கள். பாக்கியம் ராமசாமியின் நடை ஒரு மாதிரி மணிப்ரவாளமாய் இருக்கும். சீதாப்பாட்டியின் நுனி நாக்கு ஆங்கிலமும், நாசுக்கும்; அப்புசாமியின் சென்னை பாஷையும், எளிய பழக்கவழக்கங்களும், சீதாப்பாட்டி மேலான மெலிய பொறாமையும் ரசிக்கத்தக்க முரண்களாய் நம்மை மகிழ்விக்கும். இவைகளிடையான இந்த வேற்றுமை கிட்டத்தட்ட ஜீவ்ஸ், வூஸ்டர் இருவரின் மாறுபாடுகள் மாதிரி.

அந்தப் பாத்திரங்கள் இன்று வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்ததன் விளைவே இந்தக் கதை. இதுவும் ஒரு ரசிகனின் எளிய முயற்சி.

-------------------------------------

அப்புசாமித் தாத்தாவுக்குத் தலை கால் புரியவில்லை. "அடே ரசம், அபர்ணா எனக்கு பிரண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பியிருக்காடா!"


ரசகுண்டுவுக்கு உடனே புரியவில்லை! "அபர்ணாவா? யாரு தாத்தா?"


"அதான் காப்பிக்கடைல பார்த்தோமே!"


"அது காப்பிக்கடை இல்லை தாத்தா, ஸ்டார்பக்ஸ்"

"ஏதோ ஒண்ணு"

ரசகுண்டுவுக்கு தாத்தாவின் உற்சாகம் புரிந்தது. அன்று காலை காப்பிக்காகக் காத்திருந்தபோது ஒரு இளம் பெண் அப்புசாமியைப் பார்த்துப் புன்னகைத்தாள். "உங்கள் கையில் இருப்பது ஐபோன் பதினேழா?"

அப்புசாமி பெருமை பொங்க, "ஆமாம், நேற்றுதான் வாங்கினேன்!" என்றார், தன் மனைவியிடம் எவ்வளவு கெஞ்சினோம் என்பதை மனதில் பின்னுக்குத் தள்ளி.

அப்போது அப்புசாமியின் ஆர்டருக்காக அவர் பெயரைக் கூப்பிட்டார்கள். தன் பெயரைச் சுருக்கி "அப்பு" என்று கொடுத்திருந்தார். அந்த அழைப்பைக் கேட்டவுடன் அந்த இளம்பெண் பிரகாசமாக, "என் பெயரும் அப்புதான்! அபர்ணா என்று பெயர், நண்பர்கள் அப்பு என்று கூப்பிடுவார்கள்!" என்றாள்.

அப்புசாமிக்கும் அவளுடைய நண்பராக விருப்பம்தான். அதை எப்படிச் சொல்வது என்று அவர் யோசிக்கையில், அபர்ணா உற்சாகக் குரலில், "உங்க போனை நான் கொஞ்சம் பார்க்கலாமா?" என்றாள்.

அப்புசாமி பெருமையாக போனை நீட்டினார். அந்தப் புது போன், புது நீலநிற உறையில் புதிதாக மேக்கப் போட்ட நடிகை போல மின்னியது. அபர்ணா அதை ஆவலுடன் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டுத் திருப்பிக் கொடுத்தாள். அவளுடைய ஏலக்காய் டீ  வரும்வரை கொஞ்ச நேரம் பேசிக்கொண்டார்கள். அவள் கிளம்பிய உடனேதான் அவளுடைய தொடர்பு விவரங்கள் எதுவும் வாங்கவில்லை என்று அவருக்கு உறைத்தது. ரசகுண்டுவிடம் பலமுறை அதுபற்றிப்  புலம்பியிருந்தார். 

ஆகவே அவர்  ஆர்வம் புரிந்த ரசகுண்டு, "எங்கே பிரண்ட் ரிக்வெஸ்ட்? காமிங்க!" என்றான். அப்புசாமி போனை நீட்ட, அவன் அஜாக்கிரதையாய் வாங்கப்போக, அது கைநழுவி அருகிலிருந்த சாக்கடையில் விழுந்து மறைந்தது.

அப்புசாமிக்குத் தலையில் மூன்று இடிகள் ஒரே சமயத்தில் விழுந்த மாதிரி இருந்தது. புத்தம்புது போன் தவறியது ஒரு பக்கம் என்றால், அபர்ணாவின் பிரண்ட் ரிக்வஸ்டை  ஆறப்போடுகிறோமே என்ற கலக்கம் ஒரு புறம். இரண்டையும் விட சீதாப்பாட்டியின் மேல் இருந்த பயம் வேறு!

"அடேய் ரசம், படுபாவி! இப்படிப் பண்ணிட்டியே! சீதைக்கிழவிக்கு மட்டும் நான் போனைத் தொலைத்துவிட்டேன் என்று தெரிந்தால் என்னை சிக்னல் இல்லாத காட்டுக்கு அனுப்பிவிடுவாள்!", என்று புலம்பினார்.

ரசகுண்டுவுடன் கலந்தாலோசித்தபின் அந்தச் சாக்கடையில் இறங்கித் தேடுவது என்ற முடிவுக்கு வந்தார். கால்சராயை மடக்கிக் கொண்டு அவர் சாக்கடையில் இறங்குவதற்கும் சீதாப்பாட்டியின் பி  எம் டபிள்யு தெருமுனை திரும்பி அங்கே வருவதற்கும் சரியாக இருந்தது.

சீதாப்பாட்டி வண்டியை நிறுத்தி ஒரு பார்வை பார்த்தாள். அதில் தெரிந்தது கோபமா, அருவெறுப்பா, அனுதாபமா என்று சொல்ல முடியாத ஒரு முகபாவம். அப்புசாமிக்கு இன்னும் வயிற்றில் புளியைக் கரைத்தது. ஒரு சமிக்ஞை செய்துவிட்டு வண்டியை ஒட்டிக்கொண்டு போய்விட்டாள். அப்புசாமி தலையைக்குனிந்து கொண்டு பலி ஆடுபோல் வீட்டை நோக்கி நடந்தார். ரசகுண்டு அவருக்குத் துணையாக வர மறுத்துவிட்டான். பாதகன்!

அடுத்த அரைமணிநேரம் தாத்தாவுக்கு ஒரு சூறாவளியில் தலையைக் கொடுத்த உணர்ச்சி. "ஹவ்  இர்ரெஸ்பான்சிபிள். போனை சாக்கடையில் போட்டதும் இல்லாமல் அதில் இறங்க வேறு செய்தீர்கள். உங்களுக்கு கௌரவம் பற்றிக் கவலை இல்லாமல் இருக்கலாம். ஐ ஹாவ் மை ரெப்புட்டேஷன் டு ஒர்ரி அபௌட்."  என்று பொரிந்து தள்ளிவிட்டாள். 

அப்புசாமி அடுத்த இரண்டு நாட்கள் போன் இல்லாமல் தவித்தார். போன் இல்லாதது கை உடைத்த மாதிரி இருந்தது. ரசகுண்டு போனில் நாயைக் கல்லால் அடிக்கும் விளையாட்டு ஒன்று போட்டுக் கொடுத்திருந்தான். அந்த விளையாட்டில் அவர் கில்லாடி. ஆனால் ஒரு பிரச்சினை - ஒரு நாள் விளையாடா விட்டால் கூட ரேட்டிங் குறைந்துவிடும். மூன்றாம் நாள் வேறு வழியில்லாமல் வெட்கத்தை விட்டு, "சீதே போன் தொலைந்தது தொலைந்ததுதான், எனக்கு இன்னொரு ஐபோன் வாங்கித் தாயேன்". என்று கேட்டுவிட்டார். பதில் ஒன்றும் இல்லை!

மறுநாள் பனிப்போர் நீடித்தது. மாலை நான்கு மணிக்கு அப்புசாமி தினத்தந்தியை நான்காம் முறை படித்துக்கொண்டிருந்தார். சீதாப்பாட்டி அவர் முன்பு வந்து ஒன்றும் பேசாமல் அமேசான் பெயர் பொறித்த ஒரு அட்டைப்பெட்டியை வைத்துவிட்டுப் போய்விட்டாள்.  

அப்புசாமியின் உள்ளம் துள்ளிக் குதித்தது. "என்னதான் பொரிந்து கொட்டினாலும், என்மேல் சீதைக்கிழவிக்குப் பாசம் உண்டு. என் பர்சனாலிட்டி  அப்படி" என்று எண்ணிக்கொண்டு டப்பாவைப் பிரித்தார். அதில் ஐபோன் இல்லை. அதற்குப் பதிலாக ஒரு மலிவான போன் இருந்தது. போனின் பெயரும் ஒன்றும் சுவாரசியமாக இல்லை.  "நத்திங்" - இது என்ன பெயர்?

இருந்தாலும் தன் ஏமாற்றத்தை வெளியே காட்டாமல் சீதாப்பாட்டியிடம் நன்றி சொல்லிவிட்டு, அப்படியே, புதுப் போனை தன் உபயோகத்துக்குத் தக்கவாறு மராமத்து பண்ணி வாங்கி வரலாம் என்று போனார். பாட்டியோ முகத்தையே பார்க்காமல் தனக்கு கிளப் மீட்டிங் இருப்பதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

"அடியே கிழவி, உனக்கு என்ன திமிர்? ஏதோ உனக்கு இந்த சமாச்சாரங்கள் தெரிவதால் கேட்கிறேன். நீ உதவி பண்ணாட்டிப் போ! எனக்கு வேற ஆள் இல்லையா?" என்று பல்லைக் நறநறத்துக்கொண்டு ரசகுண்டுவின் வீட்டுக்கு நடந்தார். 

ரசகுண்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு சினிமாவுக்குப் போய்விட்டான். பீமா ராவைத் தேடிப்போனார். பீமாவும் இல்லை. அவன் மனைவி, 'இதோ வந்துவிடுவார்!" என்று உட்காரவைத்துவிட்டு ஒரு கப் டீ கொண்டு வந்தாள்.

குடிக்க ஆரம்பித்தபின்,  "தாத்தா, உங்கள் புது போன் தொலைந்துவிட்டதாமே!" என்றாள்.

அப்புசாமிக்குப் புரை ஏறிவிட்டது. கொஞ்சம் சுதாரித்தபின், "உனக்கு எப்படிம்மா தெரியும்?" என்று கேட்டார்.

"சீதா அக்கா  மாடி வீட்டு ராபர்ட் கிட்ட பேச வந்திருந்தாங்க. உங்க போன் பத்தித்தான்! ராபர்ட் அந்த போன் கடையின் நிர்வாகியாம். உங்க போனுக்கு இன்சூரன்ஸலேர்ந்து பணம் வாங்கித் தரேன்னு அக்கா கிட்ட சொன்னார்!"

அதிர்ச்ச்சியைக் காட்டாமல் பீமா வரும்வரை இருந்து போனைக் காட்டினார். பீமா அசகாய சூரன். பழைய நம்பரை வைத்து பக்கத்துக் கடையில் கொடுத்து எப்படியோ எல்லாம் சரி செய்து கொடுத்துவிட்டான்.

போன் வேலை செய்த உடன் அபர்ணாவின் பிரண்ட் ரிக்வெஸ்ட்டைத் தேடி அதை ஒப்புக்கொண்டார்.

அதனால் கிடைத்த குதூகலம் திரும்பி வரும்போது அறவே ஓடிவிட்டது. "அடே சீதைக்கிழவி! என்ன தைரியம் இருந்தால் என் போனுக்கு வள்ளிசா இன்சூரன்ஸ் பணம் வாங்கிட்டு எனக்கு இந்த லொட்டை போன் வாங்கி குடுப்பே? இதுக்கு எத்தனை  பிகு, எவ்வளவு பெரிய லெக்சர்! பீமா பொண்டாட்டி என்னன்னா என்னைத் தாத்தாங்கறா. உன்னை அக்காங்கறா! எனக்கு எவ்வளோ இளம் ஸ்நேகிதிகள் உண்டுன்னு தெரிஞ்சா பொறாமைலே செத்தே போயிடுவே!"

சீதாப்பாட்டியை எப்படியாவது பழி தீர்க்கவேண்டும் என்று முடிவெடுத்தார்!

Click here for Part 2

(Appusamy stories, அப்புசாமி கதைகள்)

(Pic credit: ChatGPT)

Featured Post

Parthiban Kanavu - the Unabridged English Translation

My translation of Kalki's Parthiban Kanavu is posted as a separate blog.   Here are a few easy links for you to start with. Table of Con...