1. கடவுளும் மனிதனும்
செல்வத்துள் செல்வமாம் செவிச்செல்வம் சிறந்திடவே
செவியிரண்டும் நாவொன்றும் நான்தந்தேன் - சொல்லடக்கிச்
செவ்வினிய நன்பொருள் நிதம்கேட்கும் மாந்தர்க்குப்
பல்நலனும் பெருகும் பார்!
மனிதன்:
கலைமுதல்வா, கருத்தினை ஒப்புவேன், ஆயினும்
இ(ல்)லைஅடக்கம் இப்புவியில்; சமூக - வலையுலகில்
இருகண்ணால் படித்து விரல்பத்தால் பகிரும்
நிலைபிழன்ற மாந்தரைத் திருத்து!
ஞாயிறு ஒளிமழை வெள்ளம் தடுத்துத் திங்கள் கொண்டது பெருமிதம்! வான்மகள் அழகை வியந்தவர் அளித்த வைர வளையச் சீதனம்! மானுடர் மதியத் தூக்கம் கண்டு ஆதவன் அயரும் அற்புதம்! இறைவன் இலையெனும் நாத்திகர் மனத்தில் இனமிலா ஐயம் ஒருகணம். அண்டம், ஆதி, ஆதவன் எதிரே அணுவின் அளவே நம்மினம், பகலிலே ஓர் இரவினைக் கண்டு பணிவைக் கண்டது என்மனம்.
3. இலையுதிர் கால வண்ணங்கள்
மயங்கும் மாலையில் வியந்து நடந்தேன்மரங்களின் நிறங்களில் சிலிர்த்து - நிலமகள்பனிமழை நீராடப் பயணமாகிறாள்கனியும்தன் ஆடைகள் உதிர்த்து!
குந்தவையும், நந்தினியும் வந்தியனும் எந்தம்முந்தையப் பிறவியின்`சொந்தங்களோ - வந்தனர்விந்தையாய்த் திரை மீதினில் மாந்தர்சிந்தையை முற்றும் கவர்ந்து.
துகிலினால் பொலிவுறும், துறவிகள் வழிமாற்றும்;
அடுக்களையின் நாயகியாய் ஆதிக்கம் தான்செய்யும்;
மஞ்சளின், மல்லியின் வாசத்தை வாங்கிவரும்;
ஈவெரார் வாக்கில்வரும், குணத்தினால் அகம்காக்கும்;
பல்வேறார் கண்ணீரின் பொருளாகும் - என்றும்
பெண்ணுக்கு வெங்காயம் நேர்!
#நவீன_காளமேகம் #சிலேடை
6. பயணம்
பாதையின் அழகில் பயணம் மறந்தால்
பாதையே பயணத்தின் பலனாகும்;
இலைகளின் அழகில் கிளைகள் மறைந்தால்
இலைகளே மரங்களின் எழிலாகும்;பயணத்தின் பொலிவில் கவலைகள் மறந்தால்
பயணமே வாழ்வில் முதலாகும்;
வழிகளின் அழகுகள் மறவா மனமே
நிறைபட வாழ்தலின் பொருளாகும்!
© #ஆனந்தக்கவிராயர்






No comments:
Post a Comment